தேனி மாவட்டத்தில் கடந்த 1½ மாதத்தில் 94 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்
தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு தீவிர நடவடிக்கையாக கடந்த 1½ மாதத்தில் 94 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு முதல் அலையாக கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து சுகாதாரத்துறை சார்பில் மாவட்டத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பாதிப்பு அதிகரிக்கும் இடங்களில் கூடுதல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை மாவட்டம் முழுவதும் 6 ஆயிரத்து 469 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 2-வது அலையின் தாக்கத்தால் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. தினமும் ஏராளமான இடங்களில் சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று காய்ச்சல் கண்டறியும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
94 ஆயிரம் பேருக்கு பரிசோதனை
அந்த வகையில் கடந்த மே மாதம் 1-ந்தேதி முதல் நேற்று வரை 1½ மாதத்தில் மட்டும் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 573 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த முகாம்கள் மூலம் 94 ஆயிரத்து 601 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு நடத்தப்படும் பரிசோதனையில் காய்ச்சல் பாதிப்பு இருக்கும் நபர்களுக்கு மருந்து, மாத்திரைகள், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்குவதோடு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. இதில், கொரோனா பாதிப்பு கண்டறியப்படும் நபர்களுக்கு மருத்துவமனைகள், கொரோனா நல சிகிச்சை மையங்களில் அனுமதித்தோ அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோ சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் அதிக அளவில் நடத்தப்படுவதால் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் நோய் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மாதம் நோய் பரவல் 30 சதவீதமாக இருந்தது. அதாவது 100 பேருக்கு பரிசோதனை செய்தால் அதில் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இந்்தநிலையில் கடந்த சில நாட்களாக நோய் பரவல் 6 சதவீதமாக குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story