2 மாத மின்கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்
2 மாத மின்கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்
கோவை
கொரோனா ஊரடங்கு நெருக்கடி காரணமாக சிறு, குறு தொழில்சாலைகளுக்கு, 2 மாத மின்கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் கோவை தொழில் அமைப்புகள் கோரிக்கை மனு அளித்தனர்.
ஊரடங்கு
கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கலெக்டர் சமீரனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது
கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சிறு, குறு தொழில் பிரிவை சேர்ந்த 19 அமைப்புகளை உள்ளடக்கியது.
இதில் சுமார் 15 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. சுமார் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
தமிழகத்தில் தற்போது 40 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் குறு சிறு தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கோவையில் 95 சதவீத தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
மூலப்பொருட்கள் விலை உயர்வு
கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு, பொருளாதார நெருக்கடி, மூலப் பொருள்களின் விலை உயர்வு போன்றவற்றால் குறு சிறு தொழில்கள் பின்னடைவை சந்தித்தன.
தற்போது மேலும் 40 நாட்கள் ஊரடங்கு காரணமாக நிறுவனங்கள் கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன.
எனவே கோவை மாவட்டத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்பதால் குறு சிறு தொழில்கள் அனைத்திற்கும் 2 மாதகாலம் மின்கட்டணத்தை தள்ளுபடி செய்யவேண்டும்.
ஏற்கனவே போடப்பட்டுள்ள மின் கட்டணத்தை செலுத்துவதற்கு தொழில்கள் மீண்டும் இயங்கும் தேதியில் இருந்து ஒரு மாத கால அவகாசம், அபராதம் ஏதுமின்றி கொடுக்க வேண்டும்.
ஊரடங்கு தொடர்பான தமிழக அரசின் அறிவிப்புகள் அனைத்திலும் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஒரு மாத காலத்திற்குள் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி முகாம்
எனவே சிறு குறு தொழில் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். குறிப்பாக தொழில் நிறுவனங்களில் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
அங்கு உரிய தடுப்பூசி மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story