திண்டுக்கல்லில் முதல்முறையாக பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி
திண்டுக்கல்லில் முதல்முறையாக பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால், பாலூட்டும் தாய்மார்களுக்கு முதலில் போடப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் தற்போது பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதோடு அவர்களுக்கு முன்னுரிமை அளித்து சிறப்பு முகாம் மூலம் தடுப்பூசி போடும்படி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, திண்டுக்கல் மாநகராட்சியை சேர்ந்தவர்களுக்கு திண்டுக்கல் சிறுமலர் பள்ளியில் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதையொட்டி திண்டுக்கல்லை சேர்ந்த பாலூட்டும் தாய்மார்கள் 200 பேருக்கு சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்து முகாம் நடைபெறும் இடத்துக்கு வரும்படி அழைத்தனர். அதில் 145 தாய்மார்கள் மட்டுமே முகாமுக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் தனியாக அமர வைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்களுக்கு முதல் தவணை கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுதவிர 18 வயதுக்கு மேற்பட்ட 90 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாநகர நலஅலுவலர் லட்சியவர்ணா, சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் செய்து இருந்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி போடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story