முறிந்து தொங்கும் மூங்கில்களால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


முறிந்து தொங்கும் மூங்கில்களால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
x
தினத்தந்தி 18 Jun 2021 9:07 PM IST (Updated: 18 Jun 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர்-மைசூரு சாலையில் முறிந்து தொங்கும் மூங்கில்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனால் அதனை வெட்டி அகற்ற கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மேலும் சூறாவளி காற்று வீசுகிறது.
 இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுகிறது. இந்தநிலையில் கூடலூரில் இருந்து முதுமலை வழியாக மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் ஏராளமான மூங்கில் மரங்கள் உள்ளது.
 இது கர்நாடகா-கேரளாவை இணைக்கும் முக்கிய சாலை என்பதால் ஏராளமான சரக்கு வாகனங்கள் இயக்கப்படுகிறது. 

தற்போது பெய்து வரும் பலத்த மழை மற்றும் காற்றில் மூங்கில் மரக்கிளைகள் முறிந்து தொங்குகிறது. அவை சாலை வரை நீண்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. மேலும் அப்பகுதியில் செல்லும் மின்கம்பிகளிலும் உரசுகிறது. இதனால் மின் வினியோகத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. 

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. கூடலூர் பகுதியில் தொடர் மழை மற்றும் காற்று காணப்படுவதால் அண்டை மாநிலங்களுக்கு செல்லும் சாலையில் மூங்கில் மரங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக முறிந்து விழுகிறது. 

இதனை சம்பந்தப்பட்ட துறையினர் வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இரவில் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story