இந்திய மருத்துவ சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் இந்திய மருத்துவ சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
கொரோனா காலத்தில் நாடு முழுவதும் உள்ள உயிர் காக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ முன்களப்பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான வன்முறை தாக்குதல்களை கண்டித்து நேற்று நாடு தழுவிய அளவில் தேசிய எதிர்ப்பு தினமாக இந்திய மருத்துவ சங்கம் சார்பில் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி விழுப்புரத்தில் இந்திய மருத்துவ சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்தபடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் குருநாத், பொருளாளர் வெங்கடேசன், முன்னாள் மாநில தலைவர் சிவக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமாவளவன், மகளிரணி செயலாளர் பூர்ணிமா, பொருளாளர் சுகந்தி மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கோரிக்கைகள்
இவர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது, மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை பாதுகாக்க மத்திய பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும், மருத்துவமனை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட வேண்டும், மருத்துவமனைகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மீது வன்முறையில் ஈடுபடுவோர் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story