மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் நகை பறிப்பு
விழுப்புரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் மீது வாலிபர் ஒருவர் மிளகாய் பொடியை தூவி நகையை பறித்துச்சென்றுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தை அடுத்த பண்ணகுப்பம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் செல்வம். இவர் நேற்று முன்தினம் இரவு வெளியே கடைக்கு சென்றிருந்தார். வீட்டில் அவரது மனைவி குணசுந்தரி (வயது 50) மட்டும் தனியாக அமர்ந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், செல்வம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கு டி.வி. பார்த்துக்கொண்டிருந்த குணசுந்தரியின் கண்ணில் மிளகாய் பொடியை தூவினார். இதில் கண்ணில் எரிச்சலடைந்த அவர், திருடன்.... திருடன்... என கூச்சலிட்டார். அதற்குள் அந்த வாலிபர், குணசுந்தரி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
வாலிபருக்கு வலைவீச்சு
இதனிடையே சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். வீட்டில் குணசுந்தரி மட்டும் தனியாக இருப்பதை நோட்டமிட்ட அந்த வாலிபர், நகையை பறித்துச்சென்றிருப்பது தெரியவந்தது. பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story