40 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள போக்குவரத்து மீண்டும் தொடக்கம்? பணிமனைகளில் அரசு பஸ்களை சுத்தம் செய்யும் பணி தீவிரம்
40 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் பணிமனைகளில் அரசு பஸ்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
விருத்தாசலம்,
கொரோனா என்னும் உயிர்க்கொல்லி நோயின் தீவிரம் காரணமாக, தமிழகத்தில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதத்தில் தொடர்ந்து 2 வாரங்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதன் பின்னர் தொற்று பரவல் சற்று குறைய தொடங்கியதையடுத்து தற்போது தளர்வுகளுடனான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பொது போக்குவரத்தை பொறுத்தவரை கடந்த மாதம் 10-ந்தேதி முதல் நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 40 நாட்களாக அரசு பஸ்கள் எதுவும் இயங்காமல் இருந்து வருகிறது.
ஊரடங்களில் தளர்வுகள்?
இந்த நிலையில் 5-வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கானது நாளை மறுநாள்(திங்கட்கிழமை) காலை 6 மணியுடன் முடிவடைய உள்ளது. அடுத்தக்கட்டமாக 6-வது முறையாக நீட்டிக்கப்பட உள்ள ஊரடங்கானது இன்னும் கூடுதல் தளர்வுகளுடன் அறிவிக்கப்படலாம் என்றும், இதில் பொது போக்குவரத்துகளில் ஒன்றான பஸ் போக்குவரத்து தொடங்கவும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
தடுப்பூசி
அதே நேரத்தில் பஸ் போக்குவரத்தை தொடங்க போக்குவரத்து கழகமும் தங்களை முழுவதுமாக தயார்படுத்தி வருகிறது. அதாவது முதல் கொரோனா அலைக்கு பின்னர் இருந்ததை விட, சற்று கூடுதல் பாதுகாப்புடனே தங்களை தயார்படுத்தி இருக்கிறது.
கொரோனாவுக்கு எதிரான பேராயுதமாக இருக்கும் தடுப்பூசியை பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இதில் கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள 3850 டிரைவர் மற்றும் கண்டக்டர்களில் 3700-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது 90 சதவீதத்துக்கும் அதிகமான பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
கிருமி நாசினி தெளிப்பு
இதை தொடர்ந்து தற்போது பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் பஸ்கள் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில் விருத்தாசலம் பணிமனையில் உள்ள அனைத்து பஸ்களும் சுத்தம் செய்யப்பட்டு, அதில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முழு வீச்சில் நடைபெற்றது.
இதன் மூலம் போக்குவரத்து கழகம் தங்களை முழுவதுமாக தயார்படுத்தி வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்கிட தயாராகி கொண்டு இருக்கிறது.
Related Tags :
Next Story