வேலூரில் ரேஷன்கடை, அம்மா உணவகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு


வேலூரில் ரேஷன்கடை, அம்மா உணவகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 18 Jun 2021 11:30 PM IST (Updated: 18 Jun 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் ரேஷன் கடை, அம்மா உணவகத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர்
 
கலெக்டர் ஆய்வு 

வேலூர் சத்துவாச்சாரி வள்ளலாரில் உள்ள ரேஷன் கடையில் நேற்று மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த கொரோனா நிவாரண நிதி 2-வது தவணை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என்பதையும், பொதுமக்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்து, முககவசம் அணிந்து பெற்று செல்கிறார்களா? என்பதையும் ஆய்வு செய்தார். 

இதையடுத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 வகையான மளிகை பொருட்களை அவர் வழங்கினார்.

அம்மா உணவகம்

பின்னர் சத்துவாச்சாரி வள்ளலார் அம்மா உணவகத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சமைக்கப்பட்டுள்ள உணவுகளை பரிசோதனை செய்து பார்த்தார். அம்மா உணவகம் தூய்மையாகவும், சுத்தமாகவும் பராமரிக்கப்படுகிறதா? என்றும், ஒருநாளைக்கு எத்தனை பேருக்கு சமைக்கப்படுகிறது என்றும் எத்தனை பணியாளர்கள் பணிபுரிகிறார்கள் என்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

கொரோனா பரவாமல் இருக்க சமூக இடைவெளி கடைப்பிடித்து பணியாற்ற வேண்டும் என்றும், முககவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு உணவு வழங்கக்கூடாது என்றும் அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். 

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திருகுணஅய்யப்பதுரை, மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ், துணை பதிவாளர் முரளி கண்ணன், வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் நெடுமாறன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story