கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு சிலை அமைக்க இடம் ஒதுக்கீடு
கோவில்பட்டியில் மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு சிலை அமைக்க 45 சென்ட் இடத்தை ஒதுக்கீடு செய்து பஞ்சாயத்து யூனியன் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்த சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன். சமீபத்தில் மரணம் அடைந்த அவரது உடல் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அரசு மரியாதையுடன் சொந்த ஊரான இடைசெவல் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
மேலும் கி.ராஜநாராயணன் நினைவை போற்றும் வகையில் கோவில்பட்டி நகரில் அவரது உருவச்சிலை மற்றும் நூலகத்துடன் அரங்கம் அமைக்கப்படும் என்றும், இடைசெவல் கிராமத்தில் அவர் படித்த நடுநிலைப்பள்ளி பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் அறிவித்தார். இதையடுத்து கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு சிலை அமைப்பதற்கான இடத்தை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்த நிலையில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் சிறப்பு கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடந்தது. யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள் சீனிவாசன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து யூனியன் துணைத்தலைவர் பழனிச்சாமி உள்பட 17 கவுன்சிலர்கள், பஞ்சாயத்து யூனியன் மேலாளர் முத்துப்பாண்டியன், என்ஜினீயர்கள் அலெக்ஸ், சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி, இடைசெவலை சேர்ந்த சாகித்ய அகாடமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு சிலை அமைப்பதற்கும், அரங்கம் மற்றும் நூலகம் அமைப்பதற்கும் பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் 45 சென்ட் நிலம் கொடுக்க சம்மதம் தெரிவித்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைக்கு நில மாற்றம் செய்திட ஏதுவாக இசைவினை வழங்கி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story