கல்லணைக்கால்வாயில் தண்ணீர் வந்ததால் பரிதவித்த 7 பசுமாடுகள்


கல்லணைக்கால்வாயில் தண்ணீர் வந்ததால் பரிதவித்த 7 பசுமாடுகள்
x
தினத்தந்தி 19 Jun 2021 1:14 AM IST (Updated: 19 Jun 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் கல்லணைக்கால்வாயில் தண்ணீர் வந்ததால் பரிதவித்த 7 பசுமாடுகள் பத்திரமாக மீட்கப்பட்டன.

தஞ்சாவூர்:
தஞ்சையில் கல்லணைக்கால்வாயில் தண்ணீர் வந்ததால் பரிதவித்த 7 பசுமாடுகள் பத்திரமாக மீட்கப்பட்டன.
7 பசுமாடுகள் பரிதவிப்பு
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடந்த 16-ந் தேதி கல்லணையை வந்தடைந்தது. கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்படி திறந்துவிடப்பட்ட தண்ணீர் சீறி பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது. கல்லணைக்கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் தஞ்சை மாநகருக்குள் நேற்று வந்தது.
தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலை அருகே கல்லணைக்கால்வாயில் 7 பசுமாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது தண்ணீர் பசுமாடுகள் நின்ற பகுதியை கடந்து சென்றதால் மாடுகள் எல்லாம் பரிதவித்தன. இதை பார்த்த சிலர், பசுமாடுகளின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீர் அதிகமாக வருவதற்குள் பசுமாடுகளை கரையில் ஏற்றுவதற்கான முயற்சியை மேற்கொண்டனர்.
பத்திரமாக மீட்பு
இவற்றில் 4 மாடுகளை ஜி.ஏ.கெனால் ரோட்டில் உள்ள விநாயகர் கோவில் பின்புறம் உள்ள படிக்கட்டுகளின் வழியாக பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மீதமுள்ள மாடுகளை கரைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்வதற்குள் தண்ணீர் அதிகஅளவில் வந்துவிட்டது. இதனால் குறுக்கே மாடுகளை அழைத்து வர முடியவில்லை. இதனால் ஒரு புறமாகவே மாடுகளை அழைத்து சென்று இர்வீன்பாலம் அருகே உள்ள பாதையின் வழியாக மீதமுள்ள 3 மாடுகளை கரைக்கு கொண்டு வந்தனர். இந்த மாடுகள் எல்லாம் தஞ்சை மேலவீதி பகுதிகளை சேர்ந்தவையாகும். தண்ணீர் அதிகஅளவில் வருவதற்கு முன்பாகவே மாடுகளை மீட்டதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

Next Story