நிலத்தகராறில் விவசாயி படுகொலை


நிலத்தகராறில் விவசாயி படுகொலை
x
தினத்தந்தி 19 Jun 2021 1:18 AM IST (Updated: 19 Jun 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

பனவடலிசத்திரம் அருகே நிலத்தகராறில் விவசாயி படுகொலை செய்யப்பட்டார்.

பனவடலிசத்திரம்:
பனவடலிசத்திரம் அருகே நிலத்தகராறில் விவசாயி படுகொலை செய்யப்பட்டார்.

நிலத்தகராறு

தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள திருமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா. இவருக்கு நம்பிராஜன் (வயது 42) உள்பட 4 மகன்களும், 3 மகள்களும் உண்டு.

அதே ஊரைச் சேர்ந்தவர் ராமர் பாண்டியன் மகன் அழகிய நம்பி என்ற பண்ணை (35). இவர்கள் 2 பேரும் விவசாயிகள் ஆவர். இவர்களுக்கு இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலையில் ஊரில் உள்ள பள்ளிக்கூடம் அருகே நம்பிராஜனுக்கும், அழகிய நம்பிக்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர் அழகிய நம்பி தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் நம்பிராஜனை வெட்டியதாகவும், பதிலுக்கு நம்பிராஜன் அரிவாளால் அழகிய நம்பியை வெட்டியதாக கூறப்படுகிறது. 

விவசாயி கொலை

இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த நம்பிராஜன் கீழே விழுந்தார். எனினும் ஆத்திரம் அடங்காத அழகியநம்பி கீழே கிடந்த கல்லை எடுத்து நம்பிராஜன் மீது போட்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயத்துடன் அவர் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அழகியநம்பியும் படுகாயம் அடைந்தார். 

இதுகுறித்து உடனடியாக பனவடலிசத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நம்பிராஜை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், நம்பிராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் படுகாயம் அடைந்த அழகியநம்பி சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

போலீஸ் விசாரணை

இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட நம்பிராஜனுக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

பனவடலிசத்திரம் அருகே நிலத்தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
----------


Next Story