இளம்பெண் ஆணவ கொலை; தந்தை கைது
பிரியப்பட்டணாவில் வேறு சாதி வாலிபரை காதலித்ததால் இளம்பெண்ணை ஆணவ கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
மைசூரு: பிரியப்பட்டணாவில் வேறு சாதி வாலிபரை காதலித்ததால் இளம்பெண்ணை ஆணவ கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல்
மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா டவுனை சேர்ந்தவர் ஜெயராம். இவருக்கு திருமணமாகி மனைவி, 3 மகள்கள் உள்ளனர். இவருடைய 2-வது மகள் காயத்ரி (வயது 18). இவர் பி.யூ.சி. வரை படித்துள்ளார். மேலும் காயத்ரி, பிரியப்பட்டணாவில் உள்ள ஒரு மருந்து கடையில் (மெடிக்கல்) வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், காயத்ரியும் அதேப்பகுதியை சேர்ந்த ரகு என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். ரகு வேறு சாதியை சேர்ந்தவர் என தெரிகிறது.
இவர்களின் காதல் விவகாரம், ஜெயராமுக்கு தெரியவந்துள்ளது. ரகு வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால், இந்த காதலுக்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த காதலை கைவிடும்படி தனது மகள் காயத்ரியை ஜெயராம் கண்டித்துள்ளார்.
வாக்குவாதம்
ஆனாலும் இதனை கண்டுகொள்ளாத காயத்ரி, ரகு காதலிப்பதை விடவில்லை. மேலும் ரகுவை திருமணம் செய்துகொள்ள போவதாகவும், சாதியை காரணம் காட்டி தங்களை பிரிக்க வேண்டாம் என்றும் ஜெயராமிடம் காயத்ரி வாக்குவாதம் செய்து வந்துள்ளார். மேலும் ரகுவை திருமணம் செய்வதில் காயத்ரி உறுதியாக இருந்தார்.
இந்த நிலையில், மகள் வேறு சாதியை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டால், ஊரில் தனது மானம் போய்விடும் என்று ஜெயராம் கருதினார். இதனால் தனது மகளிடம் பலமுறை ரகுவுடனான காதலை கைவிடும்படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் காயத்ரி அதனை கேட்கவில்லை என தெரிகிறது.
ஆணவ கொலை
இதனால் ஜெயராம் கடும் ஆத்திரமடைந்தார். இந்த ஆத்திரமும், சாதி வெறியும் சேர்ந்து தனது மகளை ஆணவ கொலை செய்ய ஜெயராமை முடிவு எடுக்க வைத்தது. இந்த நிலையில் நேற்று மதியம் பிரியப்பட்டணா வெளிப்பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு காயத்ரியை ஜெயராம் அழைத்து சென்றார். அப்போதும் ஜெயராம், ரகுவுடனான காதலை கைவிடும்படியும், நமது சாதியிலேயே நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பதாகவும் காயத்ரியிடம் கூறியுள்ளார்.
ஆனால் இது எதையும் காதில் வாங்காத காயத்ரி, ரகுவை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்துள்ளார். மேலும் அவர் தனது தந்தையுடன் வாக்குவாதமும் செய்துள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த ஜெயராம், தான் ஏற்கனவே திட்டமிட்டபடி மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் காயத்ரியை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் பலத்த வெட்டு காயமடைந்த காயத்ரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தந்தை கைது
இந்த சம்பவம் பிரியப்பட்டணாவில் காட்டுத்தீ போல பரவியது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் பிரியப்பட்டணா துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பிரியப்பட்டணா போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்ற பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான காயத்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வேறு சாதி வாலிபரை காதலித்ததால் ஜெயராம் தனது மகளை ஆணவ கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஜெயராமை பிடித்து விசாரித்தனர். அவரும் சாதி வெறியில் பெற்ற மகளை ஆணவ கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து பிரியப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராமை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந் சம்பவம் பிரியப்பட்டணாவில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story