ரூ.20 ஆயிரம் கோடி நீர்ப்பாசன திட்டத்தில் ஊழலா?; கர்நாடக அரசு விளக்கம்
ரூ.20 ஆயிரம் கோடி நீர்ப்பாசன திட்டத்தில் எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது.
பெங்களூரு: ரூ.20 ஆயிரம் கோடி நீர்ப்பாசன திட்டத்தில் எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது.
நீர்ப்பாசன திட்டத்தில் ஊழல்
கர்நாடகத்தில் ரூ.20 ஆயிரம் கோடி நீர்ப்பாசன திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா மீது ஆளுங்கட்சியை சேர்ந்த எச்.விஸ்வநாத் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு தலைவரே கூறியுள்ள இந்த குற்றச்சாட்டு, கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல் காங்கிரசும் இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளது. இந்த குற்றச்சாட்டை எடியூரப்பா மறுத்துள்ளார்.
உண்மைக்கு புறம்பானது
இதுகுறித்து கர்நாடக அரசின் நீர்ப்பாசனத்துறை செயலாளர் லட்சுமண் ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
எச்.விஸ்வநாத் எம்.எல்.சி., நிதித்துறையின் அனுமதி இல்லாமல் நீர்ப்பாசனத்துறையில் பத்ரா மேல் அணை, காவிரி நீர்ப்பாசன திட்டங்கள் ரூ.20 ஆயிரம் கோடியில் செயல்படுவதாகவும், அதில் ஊழல் நடந்திருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. பத்ரா மேல் அணை திட்டத்திற்கு ரூ.21 ஆயிரத்து 473 கோடி திருத்தப்பட்ட நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதித்துறை அனுமதி வழங்கியது.
மத்திய அரசு நிதி ஒதுக்கீடு
இந்த திட்டத்திற்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜல்சக்தி அமைச்சகம் அனுமதி வழங்கியது. இந்த பத்ரா மேல் அணை திட்டத்தின் கீழ் சிக்கமகளூரு, சித்ரதுர்கா, தாவணகெரே, துமகூரு ஆகிய மாவட்டங்களில் 5.57 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலத்திற்கு பாசன வசதி ஏற்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதித்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.16 ஆயிரத்து 125 கோடி வழங்குகிறது. இந்த திட்டத்தை வருகிற 2024-ம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று நிபந்தனையுடன் மத்திய அரசு நிதி வழங்குகிறது. அதனால் இந்த திட்டத்திற்கு நிதி பற்றாக்குறை இல்லை.
மந்திரிசபை அனுமதி
இந்த திட்டத்திற்கு 7 தொகுப்புகளில் (பேக்கேஜ்) டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு டெண்டருக்கு அழைப்பு விடுக்கவில்லை. தற்போது இந்த திட்டத்திற்கு டெண்டர் பணிகள் நடைபெற்று வருகின்றன. கர்நாடக மந்திரிசபையும் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இவ்வாறு அதில் லட்சுமணராவ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story