அரவிந்த் பெல்லத் எம்.எல்.ஏ. போன் ஒட்டுகேட்கப்படுவதாக புகார்; போலீஸ் விசாரணை தொடங்கியது
அரவிந்த் பெல்லத் எம்.எல்.ஏ.வின் செல்போன் ஒட்டு கேட்கப்படுவதாக கூறப்படும் புகார் குறித்து உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டு உள்ளதாக போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: அரவிந்த் பெல்லத் எம்.எல்.ஏ.வின் செல்போன் ஒட்டு கேட்கப்படுவதாக கூறப்படும் புகார் குறித்து உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டு உள்ளதாக போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்துள்ளார்.
போன் ஒட்டுகேட்பு புகார்
உப்பள்ளி-தார்வார் மேற்கு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் அரவிந்த் பெல்லத். இவர், முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று பா.ஜனதா மேலிடத்திடம் அரவிந்த் பெல்லத் வலியுறுத்தி வருகிறார்.
அதே நேரத்தில் தன்னுடைய செல்போன் ஒட்டு கேட்கப்படுவதாக நேற்று முன்தினம் அரவிந்த் பெல்லத் குற்றச்சாட்டு கூறினார். குறிப்பாக சிறையில் இருக்கும் பா.ஜனதா தலைவர்களின் பெயரை கூறி பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட யுவராஜ் சாமி தன்னுடன் பேசியதாக அவர் கூறி இருந்தார்.
போலீஸ் டி.ஜி.பி. உத்தரவு
கர்நாடகத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வே தனது செல்போன் ஒட்டு கேட்கப்படுவதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தும்படி போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட்டுக்கு அரவிந்த் பெல்லத் கடிதம் எழுதி அனுப்பி வைத்திருந்தார்.
இதையடுத்து, அரவிந்த் பெல்லத்தின் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்திற்கு, மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் உத்தரவிட்டு இருந்தார்.
பேட்டி
இதுகுறித்து பெங்களூருவில் நேற்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
அரவிந்த் பெல்லத் எம்.எல்.ஏ. தனது செல்போன் ஒட்டு கேட்கப்படுவதாக சந்தேகம் இருப்பதாக கூறி, மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதி இருந்தார்.
கடந்த சில நாட்களாக சந்தேகப்படும் நபர் தன்னை தொடர்பு கொண்டு பேசுவதாகவும், சில தவிர்க்க முடியாத செல்போன் அழைப்பு வருவதாலும், தனது செல்போன் ஒட்டு கேட்கப்படுவதாக சந்தேகம் இருப்பதாக டி.ஜி.பி.க்கு அவர் எழுதி இருந்த கடிதத்தில் கூறியுள்ளார். டி.ஜி.பி. பிரவீன் சூட் உத்தரவின் பேரில், அரவிந்த் பெல்லத்தின் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து விசாரணை தொடங்கி உள்ளது.
விசாரணை தொடக்கம்
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டு இருந்தேன். அவரது உத்தரவின் பேரில் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து மத்திய மண்டல உதவி போலீஸ் கமிஷனா் பாபு தலைமையிலான போலீசார், உடனடியாக விசாரணையை தொடங்கி உள்ளனர்.
அரவிந்த் பெல்லத்தின் செல்போன் ஒட்டு கேட்கப்படுகிறதா? என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியவரும். அவருடன் சிறையில் இருந்தபடியே பேசிய யுவராஜிடமும் விசாரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story