சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு கார், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்த தடை
சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு கார், மோட்டார் சைக்கிள்களை நிறுத்த போலீசார் தடை விதித்து உள்ளனர்.
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு கார், மோட்டார் சைக்கிள்களை நிறுத்த போலீசார் தடை விதித்து உள்ளனர்.
அரசு ஆஸ்பத்திரி
சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மேலும் நோயாளிகளை பார்ப்பதற்காக உறவினர்களும் தினமும் ஏராளமானவர்கள் கார், மோட்டார் சைக்கிளில் வந்து செல்வது வழக்கம்.
தற்போது 500-க்கும் மேற்பட்ட கொரோனா பாதித்தவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பார்க்க அனுமதி இல்லை என்றாலும் ஆஸ்பத்திரி வரை உறவினர்கள் வந்து செல்கின்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
தற்போது பஸ் போக்குவரத்து இல்லாததால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளை பார்க்க வருபவர்கள் அனைவரும் கார், மோட்டார் சைக்கிளில் வருகின்றனர். அவர்கள் தங்கள் வாகனங்களை ஆஸ்பத்திரி முன்புறம் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அரசு ஆஸ்பத்திரி முன்பு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்படும் நிலை ஏற்படுகிறது.
இதன் காரணமாக ஆஸ்பத்திரி முன்புறமுள்ள சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அரசு ஆஸ்பத்திரி முன்பு கார், மோட்டார் சைக்கிள்களை நிறுத்த போலீசார் நேற்று முதல் தடை விதித்துள்ளனர்.
பறிமுதல்
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, அரசு ஆஸ்பத்திரி முன்புறம் அதிகளவில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கலெக்டர் அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி முன்பு என 2 இடங்களிலும் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அரசு ஆஸ்பத்திரி முன்பு இனி கார், மோட்டார் சைக்கிள்களை நிறுத்த கூடாது. மீறி நிறுத்தினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினர்.
இந்த நிலையில் நேற்று அரசு ஆஸ்பத்திரி முன்பு கார், மோட்டார் சைக்கிள் நிறுத்த வந்தவர்களை அங்கு நிறுத்தக்கூடாது என்று போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதையடுத்து நோயாளிகளை பார்க்க வந்தவர்கள் தங்கள் வாகனங்களை கோட்டை பகுதியில் உள்ள சாலையின் இருபுறமும் நிறுத்தி விட்டுச் சென்றனர்.
Related Tags :
Next Story