கோவில்களில் மாத சம்பளம் இன்றி வேலைபார்க்கும் அர்ச்சகர்கள் உள்பட பணியாளர்களுக்கு ரூ.4 ஆயிரம், மளிகை பொருட்கள்-கலெக்டர் கார்மேகம் திட்டத்தை தொடங்கி வைத்தார்

கோவில்களில் மாத சம்பளம் இன்றி வேலைபார்க்கும் அர்ச்சகர்கள் உள்பட பணியாளர்களுக்கு ரூ.4 ஆயிரம், மளிகை பொருட்கள்-கலெக்டர் கார்மேகம் திட்டத்தை தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 Jun 2021 4:22 AM IST (Updated: 19 Jun 2021 4:22 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மாத சம்பளம் இன்றி வேலைபார்க்கும் அர்ச்சகர்கள் உள்பட பணியாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மாத சம்பளம் இன்றி வேலைபார்க்கும் அர்ச்சகர்கள் உள்பட பணியாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.
நிவாரண உதவி
சேலம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 1,417 கோவில்கள் உள்ளன. இதில் கொரோனா தொற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கோவில்களில் நிலையான மாத சம்பளம் இன்றி வேலைபார்க்கும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 363 பேருக்கு கொரோனா கால நிவாரண உதவியாக ரூ.4 ஆயிரம் மற்றும் 10 கிலோ அரிசி உள்ளிட்ட 15 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சேலம் சுகவனேசுவரர் கோவிலில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தொடர்ந்து சுகவனேசுவரர் கோவிலில் பணியாற்றும் அர்ச்சர்கள், பணியாளர்கள் என 10 பேருக்கு ரூ.4 ஆயிரம் மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகையான மளிகை பொருட்கள் வழங்கி இந்த திட்டத்தை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.
செயல் அலுவலர்கள்
இதுகுறித்து அவர் கூறும் போது, மாவட்டத்தில் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மாத சம்பளம் இன்றி கோவில்களில் பணியாற்றும் அர்ச்சர்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்கள் என 363 பேருக்கு அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரண உதவி வழங்கப்படுகிறது. நிவாரண உதவிகளை அவர்கள் பணியாற்றும் கோவில்களின் செயல் அலுவலர்கள், ஆய்வர்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) முகமது சபிர், சேலம் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சேலம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் உமாதேவி, சுகவனேஸ்வரர் கோவில் உதவி ஆணையாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story