கொரோனாவால் இறந்த தொழிலாளரின் குடும்பத்திற்கு நிவாரண திட்டம்-தொழிலாளர் காப்பீட்டு கழகம் அறிவிப்பு
கொரோனாவால் இறந்த தொழிலாளரின் குடும்பத்திற்கு நிவாரண திட்டத்தைதொழிலாளர் காப்பீட்டு கழகம் அறிவித்துள்ளது.
சேலம்:
தொழிலாளர் காப்பீட்டு கழகத்தின் சேலம் துணை மண்டல இயக்குனர் (பொது) அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர் காப்பீட்டு கழகம், கொரோனாவால் இறந்த காப்பீட்டாளர்களுக்காக நிவாரணத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, காப்பீட்டாளரின் வாரிசுதாரர்களுக்கு காப்பீட்டாளரின் 90 சதவீத சராசரி ஊதியம் (குறைந்தபட்சம் ரூ.1,800) மாதாந்திர நிவாரணத் தொகையாக வழங்கப்படும். இத்திட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ந்தேதியில் இருந்து 2 ஆண்டுகள் அமலில் இருக்கும். இறந்த காப்பீட்டாளர், நோய்த்தொற்று கண்டறிந்த தேதியிலிருந்து குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு முன்னரே தொழிலாளர் காப்பீட்டு கழகத்தில் காப்பீட்டாளராக பதிவு செய்திருக்க வேண்டும். நோய்த்தொற்று கண்டறிந்த தேதிக்கு முந்தைய ஒரு ஆண்டு காலத்தில், குறைந்தபட்சம் 70 நாட்கள் சந்தா செலுத்தியிருக்க வேண்டும்.
தொழிலாளர் காப்பீட்டு கழக திட்டத்தின் கீழ் பயன்பெறும் மகப்பேறு பயனாளிகள், தற்காலிக ஊனத்துக்கான பயனாளிகள் போன்றோர் விடுப்பில் இருக்கும்போது கொரோனா நோய் தொற்றால் இறக்க நேர்ந்தால் விடுப்பு நாட்களும் தகுதிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இறந்த காப்பீட்டாளரின் வாழ்க்கைத் துணை, ஆண்டுக்கு ரூ.120 செலுத்தி தொழிலாளர் காப்பீட்டு கழக ஆஸ்பத்திரியில் அல்லது மருந்தகத்தில் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இதுதொடர்பாக அருகில் உள்ள தொழிலாளர் காப்பீட்டு கழக கிளை அலுவலகத்துக்கு, இறந்தவரின் இறப்பு சான்றிதழ், கொரோனா பாசிட்டிவ் அறிக்கை, வாரிசுதாரர்களின் அடையாளம் மற்றும் பிறந்த தேதிக்கான சான்று போன்றவற்றோடு அணுகலாம். கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள தொழிலாளர் காப்பீட்டு கழக கிளை அலுவலகத்தை அணுக வேண்டும். அல்லது 0427-2336941 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story