திருமருகல் ஒன்றியத்தில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி - கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு
திருமருகல் ஒன்றியத்தில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திட்டச்சேரி,
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே பனங்குடி கிராமத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.2.75 லட்சம் மதிப்பீட்டில் பனங்குடி வாய்க்கால், மாதிரிமங்களம் வாய்க்கால், கேதாரிமங்களம் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாதிரிமங்களம் வாய்க்கால் சரியான முறையில் தூர்வாரப்படாததால் மீண்டும் தூர்வார கலெக்டர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மருங்கூர் கிராமத்தில் நடைபெற்றுவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது காவிரி வடிநிலக் கோட்டகம் உதவிசெயற்பொறியாளர் லதா மகேஸ்வரி, ஒன்றிய ஆணையர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அன்பரசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
பின்னர் திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி, கொத்தமங்கலம், சேஷமூலை ஆகிய பகுதிகளில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவி தொகையை கலெக்டர் வழங்கினார்.
Related Tags :
Next Story