காதல் திருமணம் செய்த கார் டிரைவர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார் - கொலை செய்யப்பட்டாரா?


காதல் திருமணம் செய்த கார் டிரைவர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார் - கொலை செய்யப்பட்டாரா?
x
தினத்தந்தி 19 Jun 2021 7:19 PM IST (Updated: 19 Jun 2021 7:19 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த கார் டிரைவர் உடலில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை மெயின் சாலையில் வசித்து வந்தவர் மோகன்தாஸ்(வயது 31) கார் டிரைவர். இவரது மனைவி சுந்தரி(30). கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த காதல் திருமணத்துக்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக இவர்கள் தனியாக வாடகைக்கு வீடு பிடித்து அந்த வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுந்தரி வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்று இருந்தார். கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது அவர் அங்கே கண்ட காட்சியால் அதிர்ச்சியில் உறைந்தார். வீட்டுக்குள் தனது கணவர் மோகன்தாஸ் உடலில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைப்பார்த்து சுந்தரி அலறிக் கொண்டே வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். பின்னர் இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோகன்தாசின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்தாஸ் எப்படி இறந்தார்.? அவரது உடலில் ரத்த காயங்கள் இருப்பதால் அவரை யாரேனும் அடித்துக்கொலை செய்தார்களா? மர்மமான முறையில் மோகன்தாஸ் இறந்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story