தஞ்சைக்கு வந்த காவிரி தண்ணீர் மலர்தூவி, கற்பூரம் ஏற்றி பெண்கள் வழிபாடு


தஞ்சைக்கு வந்த காவிரி தண்ணீர் மலர்தூவி, கற்பூரம் ஏற்றி பெண்கள் வழிபாடு
x
தினத்தந்தி 19 Jun 2021 7:30 PM IST (Updated: 19 Jun 2021 7:30 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சைக்கு காவிரி தண்ணீர் வந்ததால் மலர்தூவியும், கற்பூரம் ஏற்றியும் பெண்கள் வழிபாடு செய்தனர்.

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய 3 போகம் சாகுபடி நடைபெறுவது வழக்கம். டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். அதேபோல் இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீரானது தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு கடந்த 16-ந் தேதி வந்து சேர்ந்தது. அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக்கால்வாய் ஆகியவற்றில் அமைச்சர்களால் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இப்படி திறக்கப்பட்ட தண்ணீரானது தஞ்சை மாநகர மைய பகுதியில் செல்லக்கூடிய கல்லணைக்கால்வாயில் சீறி பாய்ந்து வந்தது.

தஞ்சையை அடுத்த மானோஜிப்பட்டி பகுதியில் கல்லணைக்கால்வாயில் காவிரி தண்ணீர் வருவதை பார்த்த அப்பகுதி பெண்கள் கைகளை கூப்பி வணங்கியதுடன் மலர்தூவியும், கற்பூரம் ஏற்றியும் காவிரி தாயை வணங்கினர். தண்ணீரை கண்டவுடன் அப்பகுதி மக்களும், சிறுவர்களும் உற்சாகமாக ஆற்றுக்குள் இறங்கி, தண்ணீரில் குதித்து விளையாடினர். இந்த தண்ணீரானது ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, கடைமடை பகுதியான பேராவூரணி வரை செல்ல இருக்கிறது. அந்தந்த பகுதியில் இருக்கும் விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்கி உள்ளனர்.

முன்னதாக தஞ்சையை அடுத்த பள்ளியக்கிரஹாரம் வழியாக செல்லக்கூடிய வெண்ணாற்றிலும், கரந்தை வழியாக செல்லக்கூடிய வடவாற்றிலும் தண்ணீர் இருகரைகளையும் தொட்டப்படி செல்கிறது.

Next Story