அணைகளின் நீர்மட்டம் கிடு கிடு உயர்வு


அணைகளின் நீர்மட்டம் கிடு கிடு உயர்வு
x
தினத்தந்தி 19 Jun 2021 7:45 PM IST (Updated: 19 Jun 2021 7:45 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.

தண்ணீர் வரத்து

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்தது. குறிப்பாக அவலாஞ்சி, அப்பர்பவானி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பெய்கிறது. தொடர்ந்து மழை பெய்ததால் வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து கால்வாய்களில் ஓடுகிறது. 

ந்த தண்ணீர் அணைகளில் சேகரமாகிறது. தண்ணீர் வரத்து அதிகரிப்பால் அணைகளில் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.

ஊட்டி நகராட்சிக்கு குடிநீர் வழங்குவதற்காக 10 அணைகள் உள்ளன. குறிப்பாக பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து, டைகர்ஹில், கோரிசோலா, தொட்டபெட்டா அப்பர் ஆகிய அணைகள் முக்கியமானது.

மேலும் உயர வாய்ப்பு

நீர்ப்பிடிப்பு பகுதியான பார்சன்ஸ்வேலி அணையில் இதுவரை தென்மேற்கு பருவமழை 10 சென்டி மீட்டர் பெய்தது.  இதனால் அணை நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. 50 அடி கொள்ளளவு கொண்ட பார்சன்ஸ்வேலி அணையில் 23.40 அடியாக நீர்மட்டம் அதிகரித்து இருக்கிறது. 

டைகர்ஹில் அணையின் 39 அடி கொள்ளளவில் 28.40 அடியாகவும், தொட்டபெட்டா அப்பர் அணையின் 31 அடி கொள்ளளவில் 16.5 அடியாகவும், கோடப்பமந்து அப்பர் அணையின் 10 அடி கொள்ளளவில் 10 அடியாகவும், தொட்டபெட்டா லோயர் அணையின் 14 அடி கொள்ளளவில் 14 அடியாகவும், மார்லிமந்து அணையின் 23 அடி கொள்ளளவில் 7 அடியாகவும், கோரிசோலா அணையின் 35 அடி கொள்ளளவில் 8 அடியாகவும் நீர்மட்டம் இருக்கிறது. 

ஆனால் கடந்த ஆண்டை இதே சமயத்தை ஒப்பிடும்போது தற்போது அணைகளில் நீர்மட்டம் குறைவாக உள்ளது. தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்தால் அணைகளில் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு இருக்கிறது.

மழை அளவு

நீலகிரியில் மின்வாரிய கட்டுப்பாட்டின் கீழ் 12 அணைகள் உள்ளன. இந்த அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

இந்த அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- அவலாஞ்சி-14 அப்பர்பவானி-8, செருமுள்ளி-12, பாடாந்தொரை-14, பந்தலூர்-32, சேரங்கோடு-31 மழை பதிவாகி உள்ளது. 


Next Story