அரசியலில் தவிர்க்கப்பட வேண்டிய சக்தி சசிகலா; முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பரபரப்பு பேட்டி


அரசியலில் தவிர்க்கப்பட வேண்டிய சக்தி சசிகலா; முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 19 Jun 2021 8:09 PM IST (Updated: 19 Jun 2021 8:09 PM IST)
t-max-icont-min-icon

அரசியலில் தவிர்க்கப்பட வேண்டிய சக்தி சசிகலா என்று திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார்.

திண்டுக்கல்:
அரசியலில் தவிர்க்கப்பட வேண்டிய சக்தி சசிகலா என்று திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார்.
சசிகலாவுக்கு கண்டனம்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம், திண்டுக்கல் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வை வழிநடத்தும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பாராட்டியும், சட்டமன்ற தேர்தலில் பணியாற்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் கொரோனா, கருப்பு பூஞ்சை நோய்கள் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தப்பட்டது.
மேலும் கொரோனாவால் இறந்தவர்களுக்கு ‘கொரோனா இறப்பு’ என சான்றிதழ் வழங்க வேண்டும். அ.தி.மு.க.வில் உறுப்பினராக கூட இல்லாத சசிகலா தொலைபேசியில் சிலருடன் பேசி கட்சியின் வளர்ச்சி மற்றும் புகழுக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக கூறி கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இனிவரும் காலத்தில் சசிகலாவுடன் சேர்ந்து யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அ.தி.மு.க.வை கைப்பற்ற முயற்சி 
இதைத்தொடர்ந்து நத்தம் விசுவநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் தலைமைக்கு வெற்றிடமோ, பஞ்சமோ இல்லை. அ.தி.மு.க.வுக்கும், ஜெயலலிதாவுக்கும் சசிகலா துரோகம் இழைத்தார். தற்போது குறுக்கு வழியில் அ.தி.மு.க.வை கைப்பற்ற சசிகலா முயற்சி செய்கிறார். தொலைபேசியில் பேசினால் கட்சியை கைப்பற்ற முடியுமா? சசிகலாவால் ஒரு சதவீத பாதிப்பை கூட ஏற்படுத்த முடியாது. மேலும் அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்கள் கூட தயாராக இல்லை. சசிகலா என்பது அரசியலில் தவிர்க்கப்பட வேண்டிய சக்தி. 
ஜெயலலிதா மரணத்தில் ஏதோ நடந்துள்ளது. அது தெரியாததால் ஓ.பன்னீர்செல்வம் விசாரணை ஆணையத்தில் ஆஜராகவில்லை. ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்று சசிகலாவுக்கு மட்டுமே தெரியும். அவருக்கு மனசாட்சி இருந்தால் அவர் தான் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story