திருப்பூரில் கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்தினால் 3வது அலையின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் மாநகராட்சி கமிஷனர்
திருப்பூரில் கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்தினால் 3வது அலையின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் மாநகராட்சி கமிஷனர்
அனுப்பர்பாளையம்,
திருப்பூரில் கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்தினால் 3-வது அலையின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என்று மாநகராட்சி கமிஷனர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
கமிஷனர் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றுள்ள கிராந்தி குமார் பாடி தினமும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக கொரோனா நோய் தொற்றை முற்றிலுமாக கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, அதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறார். இந்த நிலையில் 2-வது மண்டலத்திற்குட்பட்ட புதிய பஸ் நிலையம், பிச்சம்பாளையத்தில் உள்ள பழைய மண்டல அலுவலகம், போயம்பாளையத்தில் உள்ள புதிய மண்டல அலுவலகம் ஆகிய இடங்களில் நேற்று காலை 6.30 மணிக்கு மாநகராட்சி கமிஷனர் திடீரென ஆய்வு செய்தார்.
அங்கு 2-வது மண்டலத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் காய்ச்சல் பாதிப்பு கணக்கெடுக்கும் ஊழியர்கள் தொடர்பான விபரங்களையும், ஊழியர்களுக்கு கடைசியாக எப்போது பயிற்சி வழங்கப்பட்டது என்பது குறித்தும் கேட்டறிந்தார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று கூறிய அவர், காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு கொரோனா சளி பரிசோதனை செய்வது அவசியம் என்றும், கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்தினால் திருப்பூரில் 3-வது அலையின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.
பாதுகாப்பு உபகரணங்கள்
இதைதொடர்ந்து போயம்பாளையம் கங்காநகரில் நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிட்ட கமிஷனர் கிராந்தி குமார் பாடி, அப்பகுதி மக்களிடம் குடிநீர் வினியோகம் குறித்தும், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டார்.
இதேபோல் பூண்டி ரிங்ரோட்டில் மாநகராட்சி சார்பில் குப்பை கொட்டப்படும் இடத்தை ஆய்வு செய்த கமிஷனர் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
டெலி கவுன்சிலிங் மையம்
இதன் பின்பு டெலி கவுன்சிலிங் மையத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எத்தனை பேரை தொடர்பு கொண்டு பேசுகிறீர்கள் என்று கேட்டதுடன், கொடுக்கப்பட்ட பணிகளை நேர்த்தியாக செய்யுமாறு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி 2-வது மண்டல உதவி கமிஷனர் செல்வநாயகம், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், உதவி பொறியாளர் ஆறுமுகம் உள்பட மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story