நாகையில் மாற்றுத்திறனாளிகள் வராததால் களையிழந்த தடுப்பூசி முகாம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வலியுறுத்தல்
நாகையில் மாற்றுத்திறனாளிகள் வராததால் தடுப்பூசி முகாம் களையிழந்து காணப்பட்டது. தடுப்பூசி முகாம் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நாகப்பட்டினம்:-
நாகையில் மாற்றுத்திறனாளிகள் வராததால் தடுப்பூசி முகாம் களையிழந்து காணப்பட்டது. தடுப்பூசி முகாம் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கொரோனா 2-வது அலை
தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா தொற்றின் 2-வது அலை வீச தொடங்கியது. தினந்தோறும் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றதால் மக்கள் அச்சம் அடைந்தனர். முதலில் தடுப்பூசி செலுத்துவதில் மக்களிடையே தயக்கம் இருந்தது. தடுப்பூசி முகாம்களில் ஆட்களை எதிர்பார்த்து மருத்துவ பணியாளர்கள் காத்துக்கிடந்தனர்.
அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகள் அதிகரித்து, மக்களிடையே ஒருவித பீதியை ஏற்படுத்தியது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காதது உள்ளிட்ட சூழல்களால் கொரோனாவை ஒழிப்பதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசி என மக்கள் நினைக்க தொடங்கினர்.
தடுப்பூசி போட திரளும் மக்கள்
தற்போது தடுப்பூசி மீதான தயக்கம் விலகி, மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி முகாம்களை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். மக்களிடையே தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் அதிகரித்து வரும் வேளையில் தமிழகத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வந்தது.
பல இடங்களில் தடுப்பூசி போடுவதற்கு ஏராளமான மக்கள் குவிந்தாலும் ஒரு நாளைக்கு 100 முதல் 300 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. இவை சென்னையில் இருந்து மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன. கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்
மக்களும் தடுப்பூசி எங்கெங்கு போடுகிறார்கள் என ஆர்வத்துடன் தெரிந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க நாகை மாவட்டம் காடம்பாடி நகராட்சி பள்ளியில், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் நகராட்சி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.
முகாமை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் ஏகராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 220 மாற்றுத்திறனாள் உள்ளனர். அதில் முதற்கட்டமாக நேற்று 100 பேருக்கு தடுப்பூசி போடுவதற்காக முகாம் நடத்தப்பட்டது. ஆனால் காலை முதலே தடுப்பூசி போட்டுக்கொள்ள ஓரிரு மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வந்தனர்.
களையிழந்தது
மதியம் வரை வெறும் 10 மாற்றுத்திறனாளிகள் மட்டுமே தடுப்பூசி போடுவதற்காக வந்தனர். முகாம் நடக்கும் தகவல் தெரியாததால், ஆர்வம் இருந்தும் மாற்றுத்திறனாளிகளால் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அங்குள்ள அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு, செல்போனில் தொடர்பு கொண்டு விரைந்து வருமாறு அழைப்பு விடுத்தனர்.
ஆனால் மாற்றுத்திறனாளிகளோ உதவிக்கு ஆள் இல்லாமல் எங்களால் முகாமிற்கு வர முடியாது என தெரிவித்தனர். சில மாற்றுத்திறனாளிகளை நகராட்சி ஊழியர்கள் வீடுகளுக்கே சென்று அழைத்து வந்து தடுப்பூசி செலுத்தினர். பெரும்பாலானோருக்கு தடுப்பூசி முகாம் நடக்கும் தகவல் தெரியாததால், முகாம் மாற்றத்திறனாளிகள் வரத்து இன்றி களையிழந்து காணப்பட்டது. முகாமிற்கு மாற்றுத்திறனாளிகள் வராததால் எஞ்சிய தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தினர்.
இதுகுறித்து நாகை பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:-
பாதுகாக்கும் கேடயம்
கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும் கேடயமாக தடுப்பூசிகள் உள்ளன. எனவே பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வமாக உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் முகாமுக்கு சென்று தடுப்பூசி போட வேண்டுமென்றால் துணையாக மற்றொருவர் இருக்க வேண்டி உள்ளது.
அப்படி இருக்க தடுப்பூசி முகாம் குறித்து முன்கூட்டியே தெரிவித்து இருந்தால், அதற்கு நாங்கள் தயாராக இருந்திருப்போம். பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்த தகவல் கிடைக்கவில்லை. தடுப்பூசி போடும் நாளன்று தகவல் தெரிவித்ததால் உடனடியாக புறப்பட்டு வர முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
இவ்வாறு மாற்றுத்திறனாளிகள் கூறினர்.
முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வலியுறுத்தல்
தற்போதைய சூழலில் பலர் கொரோனா தடுப்பூசி போட முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தடுப்பூசி கையிருப்பு இருந்தும் மாற்றுத்திறனாளிகள் செலுத்திக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.
நாகை மாவட்டத்தில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்கள் குறித்த தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story