கால்நடைகளுக்கு காப்பீடு செய்யலாம்; கலெக்டர் தகவல்


கால்நடைகளுக்கு காப்பீடு செய்யலாம்; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 19 Jun 2021 10:27 PM IST (Updated: 19 Jun 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடைகள் இறப்பதால் ஏற்படும் நஷ்டத்தில் இருந்து பாதுகாக்க அவைகளுக்கு கால்நடை வளர்ப்போர் காப்பீடு செய்யலாம் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடைகள் இறப்பதால் ஏற்படும் நஷ்டத்தில் இருந்து பாதுகாக்க அவைகளுக்கு கால்நடை வளர்ப்போர் காப்பீடு செய்யலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

காப்பீடு திட்டம்

தமிழக அரசின் கால்நடை காப்பீடு திட்டமானது கால்நடை வளர்ப்போருக்கு கால்நடைகள் இறப்பதினால் ஏற்படும் நஷ்டங்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
2020-21-ம் ஆண்டுக்கான கால்நடை காப்பீடு திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 1,500 கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கால்நடை வளர்ப்போர் தங்களிடம் உள்ள கால்நடைகளை ஓராண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

50 சதவீத மானியம்

ஒரு பசு, ஒரு எருமை, 10 வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். ஒரு நபர் 5 கால்நடை இனங்களுக்கு மட்டுமே காப்பீடு செய்து கொள்ளலாம். கறவைப்பசு, எருமை இனங்கள் இரண்டரை வயது முதல் 8 வயதுக்குள் இருக்க வேண்டும். வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் 1 முதல் 3 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் கால்நடைகளுக்கு உரிய காப்பீடு பிரிமியத்தில் 50 சதவீதம் மானியத்தில் காப்பீடு செய்து பயனடையலாம். அருகாமையில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவர் ஆய்வு செய்து சான்று வழங்கிய பின் அதன் அடிப்படையில் கால்நடைகளுக்கு காப்பீடு செய்யப்படும். காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகளுக்கு காதுவில்லைகள் பொருத்தப்படும்.

இழப்பீடு

காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகள் இறப்பு ஏற்பட்டால் காதுவில்லையும், கால்நடை உதவி மருத்துவரால் நேரில் ஆய்வு செய்து வழங்கப்படும். கால்நடைகளின் இறப்பு சான்றிதழையும், புகைப்படமும் இணைத்து காப்பீடு நிறுவனத்தில் அளித்தால் தங்கள் கால்நடைகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ள விரும்பும் கால்நடை வளர்ப்போர் அருகாமையில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி இத்திட்டத்தில் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story