இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் 313 பேருக்கு கொரோனா நிவாரண தொகை-கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்


இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் 313 பேருக்கு கொரோனா நிவாரண தொகை-கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்
x
தினத்தந்தி 19 Jun 2021 10:33 PM IST (Updated: 19 Jun 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் 313 பேருக்கு கொரோனா நிவாரண தொகையை கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்

தர்மபுரி:
நிவாரண தொகை
கொரோனா தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாததால் சம்பளமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் கோவில் ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்குவதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர் வழங்கினார்
அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நிலையான மாத சம்பளம் இல்லாமல் பணியாற்றிவரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்கள் 313 பயனாளிகளுக்கு கொரோனா நிவாரண தொகையாக தலா ரூ.4 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி 313 பயனாளிகளுக்கு உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், கோவில் ஆய்வாளர் சங்கர், செயல் அலுவலர்கள் விமலா, சபரீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story