தளி அருகே விபத்து: மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி
தளி அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்ததில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலியானார்.
தேன்கனிக்கோட்டை:
சப்-இன்ஸ்பெக்டர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் சிவாஜி (வயது 58). தேன்கனிக்கோட்டை உட்கோட்டம் தளி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தளியில் இருந்து ஓசூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
தளி-ஓசூர் சாலையில் தொட்டஉப்பனூர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள வளைவு பக்கமாக வந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறம் உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிவாஜிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பலி
இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக சிவாஜியை மீட்டு தளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சிவாஜி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உடல் தகனம்
விபத்தில் பலியான சிவாஜியின் உடலுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பு, தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா, ஓசூர் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், சேலம் மாவட்டம் ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதையடுத்து சிவாஜியின் உடல் அவரது சொந்த ஊரான தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story