ஆண்டியப்பனூர் அணையிலிருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு


ஆண்டியப்பனூர் அணையிலிருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 19 Jun 2021 10:38 PM IST (Updated: 19 Jun 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டியப்பனூர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. டி.எம்.கதிர்ஆனந்த் திறந்து வைத்தார்.

திருப்பத்தூர்

தண்ணீர் திறப்பு

திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள ஆண்டியப்பனூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து ஆண்டியப்பனூர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார்.

இதில் வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி. எம்.‌கதிர் ஆனந்த் கலந்துகொண்டு, அணையிலிருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் அணை மதகுகளில் இருந்த பாய்ந்து ஓடிய தண்ணீரில் திருவண்ணாமலை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் ஏ.நல்லதம்பி, க.தேவராஜ், வில்வநாதன் ஆகியோர் மலர் தூவினார்கள்.

பின்னர் டிஎம்‌ கதிர்ஆனந்த் எம்.பி. கூறியதாவது:-

5,000 ஏக்கர் நிலம் பாசன வசதிபெறும்

நடப்பு வருடத்தில் தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் மராட்டிய மாநிலங்களில் குறிப்பிட்ட காலத்தில் தொடங்கி நல்ல மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இயல்பான அளவைவிட சற்று கூடுதலான அளவு மழை பெய்யும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்  தெரிவித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் ஆண்டியப்பனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரால்  கால்வாய்கள் மூலம் 2,970 ஏக்கர் நிலமும், ஏரிகள் மூலம் 2,055 ஏக்கர் நிலமும் என 5 ஆயிரம் ஏக்கரி  விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் 14 கிராமங்களும் பயன்பெறும். தற்போது வினாடிக்கு 40 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. 

இவ்வாறு அவர் கூறினார் நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை (நீர்வளம்) கண்காணிப்புப் பொறியாளர் ரவிமனோகரன், உதவி செயற்பொறியாளர் விசுவநாதன், உதவி பொறியாளர் குமார் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story