8 ¾ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை கடலூரில் நடமாடும் ஆட்டோ மூலம் பரிசோதனை நடத்தப்படுகிறது


8 ¾ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை கடலூரில் நடமாடும் ஆட்டோ மூலம் பரிசோதனை நடத்தப்படுகிறது
x
தினத்தந்தி 19 Jun 2021 11:15 PM IST (Updated: 19 Jun 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 72 ஆயிரத்து 211பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 56 ஆயிரத்து 130 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கடலூரில் நடமாடும் ஆட்டோ மூலம் பரிசோதனை நடத்தப்படுகிறது.


கடலூர், 

தமிழகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வந்த கொரோனா வைரஸ் பரவல் தற்போது குறைய தொடங்கி உள்ளது. கடலூர் மாவட்ட மக்களையும் ஆட்டிப்படைத்த கொரோனா வைரசால் தினசரி 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் அரசுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் எடுத்த தீவிர தடுப்பு நடவடிக்கையால் மாவட்டத்தில் தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ளது. ஆனால் கொரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கை மட்டு குறைந்தபாடில்லை. தினசரி 10-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி வருகின்றனர்.

1,800 பேர் சிகிச்சை

மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய அரசு மருத்துவமனைகளிலும், தனிமைப்படுத்தும் மையங்களிலும் தங்க வைக்கப்படுகின்றனர். மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் உள்ள படுக்கைகள் அனைத்தும் கடந்த வாரம் வரை முழுவதுமாக நிரம்பி இருந்த நிலையில், தற்போது படுக்கைகள் அனைத்தும் காலியாக தொடங்கியுள்ளன.


கடந்த வாரம் கடலூர் மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று நிலவரப்படி 1800 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 454 பேர் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

56 ஆயிரம் பேருக்கு தொற்று

மேலும் இதுவரை கடலூர் மாவட்டத்தில் 8 லட்சத்து 72 ஆயிரத்து 211 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 56 ஆயிரத்து 130 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 53 ஆயிரத்து 132 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். மேலும் 707 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இது தவிர மாவட்டத்தில் 131 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன.

நடமாடும் ஆட்டோ

இதற்கிடையே கடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் குடியிருப்போருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதற்காக நகராட்சி சார்பில் 7 நடமாடும் ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிக்கு இந்த ஆட்டோக்கள் மூலம் நகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளுக்கும் வீதி வீதியாக முன் களப்பணியாளர்கள் சென்று அங்கு குடியிருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்கின்றனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.

Next Story