போர்வெல் அதிபர்கள் வேலைநிறுத்தம்


போர்வெல் அதிபர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 20 Jun 2021 12:26 AM IST (Updated: 20 Jun 2021 12:26 AM IST)
t-max-icont-min-icon

டீசல்-மூலப்பொருட்கள் விலை உயர்வால் போர்வெல் அதிபர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகாசி, 
டீசல்-மூலப்பொருட்கள் விலை உயர்வால் போர்வெல் அதிபர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 
டீசல் விலை உயர்வு 
சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறு அமைக்கும் போர்வெல் அதிபர்கள் உள்ளனர். 
இவர்களிடம் 400 பேர் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டீசல் விலை லிட்டர் ரூ.75 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.94-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் போர்வெல் தொழிலில் ஈடுபட்டுவருபவர்கள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகி வருகிறார்கள். 
மூலப்பொருட்கள் தட்டுப்பாடு 
போதிய லாபம் இல்லாமல் தொடர்ந்து நஷ்டத்துக்கு தொழில் செய்து வந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள போர்வெல் அதிபர்கள் கடந்த 2 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மாவட்டம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்டவர்கள் வேலை இழந்து தவித்து வருவதாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட போர்வெல் உரிமையாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் நலச்சங்கத்தின் செயலாளர் முருகன் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களாக டீசல், ஆயில், பைப்கள் மற்றும் உதிரிபாகங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் சில மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 
இந்த நிலையில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.75 என்ற நிலை இருந்த போது வசூலிக்கப்பட்ட கட்டணம் தான் தற்போதும் வசூலிக்கப்படுகிறது. இதனால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. 
தற்போது உள்ள நஷ்டத்தை குறைக்க கட்டண உயர்வு மிக அவசியமானதாக தெரிகிறது. எனவே இது குறித்து சங்க நிர்வாகிகள் பேசி முடிவு செய்யும்வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டு நாளை (திங்கட்கிழமை) வரை வேலை நிறுத்தம் நடைபெறும். சங்க நிர்வாகிகள் புதிய கட்டணத்தை முடிவு செய்து அறிவித்தவுடன் பணிகளை செய்ய உள்ளோம்.
 டீசல் விலை உயர்வால் தற்போது இந்த மாவட்டம் முழுவதும் சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள்.
 இவ்வாறு அவர் கூறினார். 
பேட்டியின் போது தலைவர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் சந்தனகுமார். ராயல்மாரி, முருகேசன், மருது ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story