கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள குவிந்த பொதுமக்கள்


கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 20 Jun 2021 12:27 AM IST (Updated: 20 Jun 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

கரூர், வேலாயுதம்பாளையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் குவிந்தனர்

கரூர்
கொரோனா பாதிப்பு
கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பால் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
இதில் கரூர் மாவட்டத்தில் நாள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுதல், பரிசோதனை செய்து நோய் தொற்று கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் நடந்து வருகிறது. 
நீண்ட வரிசை
இந்தநிலையில், கரூர் தாந்தோணிமலை அரசு பள்ளி மாணவர் விடுதி கட்டிடத்தில் அரசு அலுவலர்கள், ஒன்றிய அலுவலர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலக அலுவலர்கள் என மொத்தம் 350 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை சார்பில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. 
இந்தநிலையில் நேற்று காலை 6 மணி முதலே கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள அரசு அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மட்டுமல்லாமல், பொதுமக்களும் அதிக அளவில் நீண்ட வரிசையில் நின்றனர். இதையடுத்து ஆதார் பதிவு செய்யப்பட்டு அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 
போக்குவரத்து கழக ஊழியர்கள்
கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்டாங்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பள்ளபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கும், திருமாநிலையூரில் அமைந்துள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும், கரூர் காமராஜ் சாலையில் அமைந்துள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் அலுவலக ஊழியர்களுக்கும் நேற்று தடுப்பூசி போடப்பட்டது.

Next Story