நெல்லை அருகே மாணவனுக்கு அரிவாள் வெட்டு: மேலும் 6 பேர் கைது


நெல்லை அருகே மாணவனுக்கு அரிவாள் வெட்டு:  மேலும் 6 பேர் கைது
x
தினத்தந்தி 20 Jun 2021 12:38 AM IST (Updated: 20 Jun 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே மாணவனுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவத்தில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நெல்லை:
நெல்லை அருகே மாணவனுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவத்தில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாணவனுக்கு வெட்டு

நெல்லை அருகே உள்ள கீழமுன்னீர்பள்ளம் முல்லைநகர் பகுதியை சேர்ந்த ஐ.டி.ஐ. மாணவர் பாலமுகேஷ் (வயது 19). கடந்த 16-ந் தேதி பாளையங்கால்வாய் பகுதியில் குளித்துக் கொண்டு இருந்த இவரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியது. இதையடுத்து அவரது உறவினர்கள் உள்ளிட்டவர்கள் எதிர்தரப்பை சேர்ந்தவர்களின் வீடுகள் மீது கல்வீசி தாக்கினார்கள்.

மேலும் அங்கு இருந்த வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. 
இதையடுத்து இருதரப்பினரும் வெவ்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து செல்ல வைத்தனர்.

6 பேர் கைது

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், மேற்பார்வையில் முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி இருதரப்பை சேர்ந்த 5 பேரை ஏற்கனவே கைது செய்தனர். 

இந்த நிலையில் மாணவரை வெட்டியது தொடர்பாக கீழமுன்னீர்பள்ளத்தை சேர்ந்த சங்கர் என்ற சங்கரலிங்கம் (22), அருணாசலம் (21), தருவையைச் சேர்ந்த முத்து (20), தென்திருபுவனத்தை சேர்ந்த பேச்சிதுரை (22), பாபுமணி என்ற சுப்பிரமணி, புது கிராமத்தை சேர்ந்த முருகன் (24) ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story