குமரியில் அரசு பஸ்களை தயார்படுத்தும் பணி தீவிரம்
தமிழகத்தில் போக்குவரத்தை தொடங்க மருத்துவக்குழு பரிந்துரை செய்ததையடுத்து குமரி மாவட்டத்தில் அரசு பஸ்களை தயார் படுத்தி கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நாகர்கோவில்:
தமிழகத்தில் போக்குவரத்தை தொடங்க மருத்துவக்குழு பரிந்துரை செய்ததையடுத்து குமரி மாவட்டத்தில் அரசு பஸ்களை தயார் படுத்தி கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பஸ் போக்குவரத்து
தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது தொற்று நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொதுஊரடங்கு நிறைவடையும் நிலையில் பல்வேறு கூடுதல் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் பஸ்களை இயக்க மருத்துவக்குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனால் தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் பொது போக்குவரத்தை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. எனவே முன்னெச்சரிக்கையாக பஸ்களை தயார் செய்யும் பணிகள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடந்து வருகிறது.
தயார் நிலையில்
குமரி மாவட்டத்திலும் அரசு பஸ்களை தயார் செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. அனைத்து பஸ்களும் சுத்தம் செய்யப்பட்டு தொழில்நுட்ப பணியாளர்கள் மூலம் பேட்டரி, பிரேக், லைட் போன்றவை நேற்று முழுமையாக சோதனையிடப்பட்டது. பின்னர் பஸ் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி போடப்பட்டது.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் 12 அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் உள்ளன. இங்கிருந்து 760 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 444 டவுண் பஸ்கள் மாவட்டத்திற்குள்ளும், 316 பஸ்கள் வெளி மாவட்டத்திற்கும் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு என்பதால் பணிமனைகளில் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு தொழில்நுட்ப பணியாளர்கள் மூலம் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பஸ்களை இயக்க தயார் நிலையில் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story