ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொத்தடிமையாக வைத்திருந்தவர் கைது


ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொத்தடிமையாக வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 20 Jun 2021 1:27 AM IST (Updated: 20 Jun 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொத்தடிமையாக வைத்திருந்தவரை போலீசார் ைகது செய்தனர்.

மதுக்கூர்:
மதுக்கூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொத்தடிமையாக வைத்திருந்தவரை போலீசார் ைகது செய்தனர். 
ரூ.50 ஆயிரம் கடன் 
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள அத்திவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை(வயது 45). இவர், பைனான்ஸ் நிறுவனம் வைத்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். 
இவரிடம் மதுக்கூர் இடையக்காடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அசாருதீன்(23) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். மேலும் கடன் தொகையை தவணை முறையில் கட்டி வந்துள்ளார். 
கொலைமிரட்டல் 
இந்த நிைலயில் ராஜதுரை, அசாருதீனிடம் சில மாதங்கள் கழித்து நீ முறையாக தவணை கட்டவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து அசாருதீன் தனது ஆட்டோவை விற்று ரூ.50 ஆயிரத்தை உடனடியாக ராஜதுரையிடம் கொடுத்துள்ளார். 
ஆனால் ராஜதுரை நீ முறையாக பணம் கட்டாததால், உனது கடன் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.6 லட்சம் ஆகிவிட்டது  என்று கூறியுள்ளார். மேலும் பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று அசாருதீனை மிரட்டியுள்ளார். இதுகுறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தால் உன் குடும்பத்தை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார்.
கைது 
இதுகுறித்து அசாருதீன் மதுக்கூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜதுரையை கைது செய்தனர். 
மேலும் அவரது பைனான்ஸ் அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள், பத்திரங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொத்தடிமையாக
மதுக்கூர் மவுலானா தோப்பை சேர்ந்தவர் மெய்யர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு ராஜதுரையிடம் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதில் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்தை திருப்பி கொடுத்துள்ளார். 
ஆனால் ராஜதுரை, மெய்யரிடம் கடன் தொகை ரூ.6 லட்சத்தை தாண்டி விட்டது என்று கூறி இந்த கடனை அடைப்பதற்காக மெய்யர்(52), அவரது மனைவி சாந்தா(46), அவர்களது மகன்கள் வெங்கடேஸ்வரன(24)், கார்த்தி(20) ஆகிய 4 பேரையும் வீட்டுக்கு அழைத்து சென்று தனது தோப்பில் கடந்த 6 ஆண்டுகளாக கொத்தடிமையாக வேலைபார்க்க வைத்துள்ளார். 
மீட்பு
மேலும் தப்பிக்க முயன்ற 4 பேரையும் ராஜதுரை அடித்து சித்ரவதை செய்துள்ளார். இதனால் உயிருக்கு பயந்து 4 பேரும் அங்கேயே வேலைபார்த்து வந்துள்ளனர். 
இதுகுறித்து அத்திவெட்டி கிராம நிர்வாக அலுவலர் கோகுல் பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பாலச்சந்தருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக உதவி கலெக்டர் பாலச்சந்தர், பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் மற்றும் அதிகாரிகள் அத்திவெட்டியில் உள்ள ராஜதுரை தோப்பிற்கு சென்று அங்கு கொத்தடிமையாக வேலைபார்த்த 4 பேரையும் மீட்டனர். 
இது குறித்து மதுக்கூர் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் கோகுல் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜதுரையை கைது செய்தனர்.

Next Story