கோஷ்டி மோதல்; 5 பேருக்கு அரிவாள் வெட்டு


கோஷ்டி மோதல்; 5 பேருக்கு  அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 20 Jun 2021 1:37 AM IST (Updated: 20 Jun 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே கோஷ்டி மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையொட்டி 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே கோஷ்டி மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையொட்டி 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
டாஸ்மாக் கடை
செண்பகராமன்புதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகேஷ். இவருக்கும், இலந்தை நகரை சேர்ந்த பாபு (வயது 20) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் செண்பகராமன்புதூரிலிருந்து தோவாளைக்கு செல்லும் சாலையில் கால்வாய் கரையோரம் டாஸ்மாக்கடை உள்ளது. அதன் அருகே முருகேஷ், இறச்சகுளம் அம்பல திருத்தி காலனியை சேர்ந்த தேவா ஆனந்த் (24) அவருடைய தம்பி வாசுதேவன், கிருஷ்ணபுரம் காலனியைச் சேர்ந்த ரெஜின், திடல் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தனர். அதன் அருகிலேயே செண்பகராமன் புதூர் அகஸ்தியர் காலனியைச் சேர்ந்த ராஜா (34), பாபு, மதன்பாபு இசக்கியப்பன் ( 37), அப்பு (34), பார்த்திபன் ( 23), சுமன் (19) ஆகியோரும் மது குடித்தனர். 
கோஷ்டி மோதல்
அப்போது முன்விரோதம் காரணமாக இரு கோஷ்டியினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. பின்னர் அது மோதலாக மாறி, கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர்.  
இதில் தேவாஆனந்த், வாசுதேவன், பாபு, ராஜா, மதன் பாபு ஆகியோருக்கு கத்திக்குத்தும், அரிவாள் வெட்டும் விழுந்தது. இதனால் படுகாயம் அடைந்த 5 பேரும் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
5 பேர் கைது
இந்த கோஷ்டி மோதல் குறித்து இருதரப்பினரும் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்படி ராஜா கொடுத்த புகாரின் பேரில் தேவா ஆனந்த், வாசுதேவன், முருகேஷ், ரெஜின், கனகராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
அதே சமயம் தேவா ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் ராஜா, பாபு, மதன் பாபு, இசக்கியப்பன், அப்பு, பார்த்திபன், சுமன் ஆகிய 7பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தேவா ஆனந்த் உள்பட காயம் அடைந்த 5 பேரும் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற 7 பேர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story