கர்நாடகத்தில் அரசு பஸ்கள் நாளை முதல் ஓடும்; எடியூரப்பா அறிவிப்பு


கர்நாடகத்தில் அரசு பஸ்கள் நாளை முதல் ஓடும்; எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Jun 2021 8:43 PM GMT (Updated: 19 Jun 2021 8:43 PM GMT)

ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அறிவித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை கடந்த மார்ச் மாதம் பரவத் தொடங்கியது. 

கொரோனா ஊரடங்கு

ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இதனால் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் தொடர்ந்து தளர்வுகள் செய்யப்பட்டு வருகிறது. 

கொரோனா பரவல் குறைந்து வரும் மாவட்டங்களில் மட்டும் இந்த தளர்வுகளை அரசு செய்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வருகிற 21-ந் தேதி அதிகாலை 5 மணி வரை 58 மணி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

எடியூரப்பா ஆலோசனை

கொரோனா பரவல் குறைந்திருப்பதால் ஊரடங்கில் தளர்வுகள் செய்வது குறித்து நேற்று மந்திரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு பஸ்கள், மெட்ரோ ரெயில்கள் இயக்குவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டம் முடிந்ததும் நேற்று இரவு முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கடைகள் திறக்க அனுமதி

கர்நாடகத்தில் ஊரடங்கு காரணமாக பல மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. இதையடுத்து, ஊரடங்கில் எந்த மாதிரியான தளர்வுகள் செய்ய வேண்டும் என்பது குறித்து மந்திரிகளுடன் விரிவாக ஆலோசித்தேன். நிபுணர்கள் குழுவும் தளர்வுகள் செய்வது குறித்து சில பரிந்துரைகளை அரசுக்கு வழங்கி இருந்தது. அதன்படி, வருகிற 21-ந் தேதி (அதாவது நாளை) முதல், கொரோனா பரவல் 5 சதவீதத்திற்கு குறைவாக உள்ள 16 மாவட்டங்களில் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

அதன்படி, பெங்களூரு, மண்டியா, பெலகாவி, உத்தரகன்னடா, துமகூரு, கோலார், கதக், ராமநகர், பாகல்கோட்டை, ஹாவேரி, ராய்ச்சூர், யாதகிரி, பீதர், சிக்பள்ளாப்பூர், கலபுரகி, கொப்பல் உள்பட 16 மாவட்டங்களில் அதிகாலை 5 மணியில் இருந்து மாலை 5 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பஸ், மெட்ரோ ரெயில் இயக்கம்

குளிர்சாதன வசதிகள் இல்லாமல் ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், தங்கும் விடுதிகள் 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன், அங்கேயே அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படுகிறது. இது மாலை 5 மணிவரை மட்டுமே ஆகும். வெளிப்புற படப்பிடிப்புகள் 50 சதவீதம் பேருடன் நடைபெறலாம். மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் ஓடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பஸ்களில் 50 சதவீத பயணிகள் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

அதுபோல், பெங்களூருவில் 50 சதவீத பயணிகளுடன் மெட்ரோ ரெயில் இயங்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீதம் பேர் பணியாற்றி கொள்ளலாம். உடற்பயிற்சி கூடங்கள் திறக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. அங்கு 50 சதவீதம் பேர் மட்டுமே பயிற்சி மேற்கொள்ளலாம். இந்த 16 மாவட்டங்களில் மேற்கண்ட தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.

மைசூருவில் முழு ஊரடங்கு

மாநிலத்தில் 5 சதவீதத்திற்கு மேல் கொரோனா பரவல் இருக்கும் ஹாசன், உடுப்பி, சிவமொக்கா, பல்லாரி, சித்ரதுர்கா, குடகு, சாம்ராஜ்நகர், சிக்கமகளூரு, தாவணகெரே, தட்சிணகன்னடா, விஜயாப்புரா, பெங்களூரு புறநகர், தார்வார் உள்பட 13 மாவட்டங்களில் ஊரடங்கில் சிறிதளவு தளர்வு செய்யப்படுகிறது. அந்த 13 மாவட்டங்களிலும் இதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட தளர்வுகள் அமலில் இருக்கும். 13 மாவட்டங்களிலும் அதிகாலை 5 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை கடைகள் திறந்து கொள்ளலாம். அத்தியாவசிய பொருட்கள் கடைகள் திறக்க மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

மைசூரு மாவட்டத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு இருக்கிறது. இதனால் மைசூருவில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அங்கு ஊரடங்கில் எந்த தளர்வும் செய்யப்படாது. காலை 6 மணியில் இருந்து காலை 10 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்கி கொள்ள அனுமதிக்கப்படும். இந்த ஊரடங்கு தளர்வு வருகிற 21-ந் தேதியில் இருந்து அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

வார இறுதி நாட்களில்...

ஊரடங்கில் தளா்வுகள் செய்யப்பட்டாலும், மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும். அதன்படி, இரவு 7 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு மாநிலம் முழுவதும் ஜூலை 5-ந்தேதி அதிகாலை 5 மணிவரை அமலில் இருக்கும். அத்துடன் வார இறுதி நாட்களிலும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு தொடரும். அதன்படி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு 7 மணியில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை மாநிலம் முழுவதும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு தொடரும்.

Next Story