கிருஷ்ணா கால்வாய் வெள்ளத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி
ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் பாய்ந்து வந்த வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
நீர்த்தேக்கத்தில் பிணம்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பூண்டி நீர்த்தேக்கத்தில் நேற்று காலை சிறுவன் பிணம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் பென்னலூர் பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் விரைந்து அங்கு சென்று சிறுவன் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதையடுத்து இறந்த சிறுவன் யார்? என்று விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாவது:-
அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 40) எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி சந்திரா (35). இவர்களுடைய ஒரே மகன் காமேஷ் (14). ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
வெள்ளத்தில் சிக்கி ...
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் காமேஷ் என்ற சிறுவன் மாயமானதாக தெரிகிறது. அவரைத் தேடும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டனர்.பூண்டி ஏரியில் சிறுவன் உடல் மிதந்த செய்தி அறிந்த காமேஷின் உறவினர்கள் சந்தேகத்தின் பேரில் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தபோது, இறந்த நபர் காமேஷ் தான் என்று உறுதி செய்ததாக போலீசார் தெரிவித்தனர். பலியான காமேஷ் நேற்றுமுன்தினம் மாலை தன் நண்பர்களுடன் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சிற்றம்பாக்கம் பகுதியில் கிருஷ்ணா கால்வாயில் குளித்தபோது வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.
Related Tags :
Next Story