கம்பத்தில் முதல்போக சாகுபடி: வயல்களில் நாற்று நடும் பணி தீவிரம்
கம்பத்தில் முதல்போக சாகுபடியையொட்டி வயல்களில் நாற்று நடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
கம்பம்:
தேனி மாவட்டம் லோயர்கேம்பில் தொடங்கி பழனிசெட்டிப்பட்டி வரை முல்லைப்பெரியாறு அணையின் பாசனத்தின் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகின்றன. இதையடுத்து முதல் போக சாகுபடிக்காக கடந்த 1-ந்தேதி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான கம்பம், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முதல்போக சாகுபடிக்கு நிலத்தை டிராக்டர்கள் மூலம் உழுது தயார்படுத்தி நாற்றங்கால் அமைத்தனர். தற்போது நாற்றங்காலில் இருந்து நாற்றுக்களை பிரித்தெடுத்து வயல்களில் நடவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு மழை பொய்த்துப்போனதால் முதல் போக சாகுபடி காலம் தாழ்த்தி நடைபெற்றது. இதனால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை, இந்த ஆண்டு பருவநிலைக்கு தகுந்தாற்போல் முதல் போக சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளது. இதனால், இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.
Related Tags :
Next Story