கல்லணைக்கால்வாயில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்


கல்லணைக்கால்வாயில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Jun 2021 7:54 PM IST (Updated: 20 Jun 2021 7:54 PM IST)
t-max-icont-min-icon

குறுவை சாகுபடி பணிகளை முழுமையாக மேற்கொள்ள ஏதுவாக கல்லணை கால்வாயில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்,

இந்த ஆண்டு தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட பாசனத்துக்காக மேட்டூர் அணை கடந்த 12-ந் தேதி திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததும் அங்கிருந்து 16-ந் தேதி காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தற்போது காவிரியில் 3 ஆயிரத்து 600 கன அடியும், வெண்ணாற்றில் 3 ஆயிரத்து 600 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லணைக்கால்வாயில் 500 கன அடியும், கொள்ளிடத்தில் 700 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆறுகளில் திறக்கப்படும் தண்ணீர் முதலில் கடைமடை வரை சென்றடைந்ததும் பின்னர் கிளை வாய்க்கால்களில் பாசனத்திற்கு திறக்கப்படும். ஆனால் ஆறுகளில் முழு கொள்ளளவு தண்ணீர் எடுத்தால் மட்டுமே கடைமடை பகுதிவரை தண்ணீர் சென்றடையும். கல்லணை கால்வாயில் 500 கன அடி மட்டுமே தண்ணீர் எடுப்பதால் வாய்க்கால்களுக்கு கூட தண்ணீர் செல்லாமல் ஆற்றில் தரையோடு தரையாக தண்ணீர் செல்கிறது.

இது எந்த வகையிலும் விவசாயத்திற்கு பயன்படாது. முழு கொள்ளளவான 4 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் எடுத்தால் மட்டுமே பாசன கால்வாய்களில் பாய்ந்து சாகுபடியை மேற்கொள்ள முடியும்.

தமிழக அரசு டெல்டா மாவட்டத்தில் 3.10 லட்சம் ஏக்கர் அளவிற்கு குறுவை இலக்கு நிர்ணயித்து சாகுபடி பணிகளை தொடங்கிய விவசாயிகள் தண்ணீருக்காக காத்திருக்கும் நிலையில் குறைந்த அளவு தண்ணீர் திறப்பதால் நாற்றங்கால் தயார் செய்வதற்கு கூட முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.‌

தற்போது திறக்கப்படும் தண்ணீரின் அளவு 500 கனஅடியாக இருந்தாலும் இது கடைமடை வரை செல்வதற்கு கூட வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

கல்லணை கால்வாயில் 500 கன அடி தண்ணீர் திறப்பு என்பது போதாது.‌ இதில் முழு கொள்ளளவு தண்ணீர் திறக்க வேண்டும். அப்போதுதான் விரைவில் கடைமடை பகுதிக்கு செல்வதோடு கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டு பாசனத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக அமையும்.

எனவே உடனடியாக கூடுதலாக தண்ணீர் திறந்து சாகுபடியை முழுமை அடையச் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் இலக்கை அடைய முடியும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story