விவசாயிகளின் நிலங்களில் எண்ணெய் குழாய் பதிப்பதற்கு உரிய இழப்பீடு
தஞ்சை அருகே விவசாயிகளின் நிலங்களில் எண்ணெய் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகனங்களை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதையடுத்து கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவது என உடன்பாடு செய்யப்பட்டது.
தஞ்சாவூர்,
நாகை மாவட்டம் நரிமணத்திலிருந்து திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு விவசாய விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பூதலூர் தாலுகா செங்கிப்பட்டி சரகம் வெண்டயம்பட்டி, ராயமுண்டான்பட்டி மற்றும் சுரக்குடிப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள விளை நிலங்களில் குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து ஐ.ஓ.சி.எல் நிறுவனத்தின் வாகனங்களை சிறைபிடித்து கடந்த 14-ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் பங்கெடுக்குமாறு தஞ்சை கோட்டாட்சியர் அழைப்பு விடுத்திருந்தார். அதன் அடிப்படையில் நேற்று தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கோட்டாட்சியர் வேலுமணி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், பூதலூர் தாசில்தார் ராமச்சந்திரன், திருச்சி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன துணை ஆட்சியர் ரவிகண்ணன், முதுநிலை மேலாளர் முருகேசன், மேலாளர் அஜித், திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபானந்தம், தான்தோன்றீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் பாலமுருகன் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் பங்கேற்றனர்.
விவசாயிகள் தரப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பூதலூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றியக்குழு துணை தலைவர் சுப்பிரமணியன், சிவக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாஸ்கர், முகில், வக்கீல் கோவிந்தராஜ் உள்ளிட்ட 16 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்க்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி சமீபத்தில் இந்திய அரசின் தொழில்கள்துறை-பெட்ரோலியம் வெளியிடப்பட்ட புதிய அரசாணை படி. இந்த வழித்தடதிட்டத்திற்கான அறிவிப்பு 2012-ம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தாலும் இதுநாள்வரை நிலம் கையகப்படுத்தபடாததால் இந்த சட்டத்தின்படி மேற்குறிப்பிட்ட வருவாய் கிராமங்களின் வழியே செல்லும் நில உரிமையாளர்களுக்கு உரியஇழப்பீடு 3 மாதங்களுக்குள் வழங்க கலெக்டரின் ஆணை விரைந்து பெற்று இழப்பீடு வழங்க வருவாய் கோட்டாட்சியர் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். மேலும் கோவில் நிலங்களில் சாகுபடி நிலங்கள் மற்றும் பயிர் இழப்பீடு தொகை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இசைவு பெற்று குத்தகைதாரர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலரால் உறுதியளிக்கப்பட்டது.
மேலும் இப்பணியினை வருகிற 20-7-2021-க்குள் முழுமையாக முடிக்கவும், குழாய் பதிக்கும் பணி முடிந்தவுடன் நிலத்தை சமன்படுத்திடவும், வரப்புகள் கட்ட வேண்டிய இடங்களில் வரப்புகள் கட்டியும் விவசாயிகள் நிலத்தை பயிர் செய்திட ஏதுவான வகையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் நிர்வாகிகள் ஒப்படைத்து விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த உறுதி மொழிகளை ஏற்று விவசாயிகள் எண்ணெய் குழாய் பதிக்கும் பணியிணை வருகிற 23-ந் தேதி முதல் தொடங்கிட சம்மதம் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story