காயல்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7 லட்சம் மதிப்பிலான மஞ்சள் பறிமுதல்
காயல்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7 லட்சம் மதிப்பிலான மஞ்சளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7 லட்சம் மதிப்பிலான மஞ்சளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தலைமறைவான 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
போலீசார் ரோந்து பணி
ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவில் சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காயல்பட்டினம் ஓடைக்கரை கடற்கரையில் நின்ற நாட்டுப்படகில் சிலர், லோடு ஆட்டோவில் இருந்து மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அவர்கள், போலீசாரைக் கண்டதும் படகு, லோடு ஆட்டோவில் இருந்து குதித்து இருளில் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை.
விரலி மஞ்சள் பறிமுதல்
தொடர்ந்து படகு, லோடு ஆட்டோவை போலீசார் சோதனை செய்தனர். இதில் மொத்தம் 72 மூட்டைகளில் 2.4 டன் விரலி மஞ்சள் இருந்தது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் ஆகும். இதையடுத்து நாட்டுப்படகு, லோடு ஆட்டோவுடன் விரலி மஞ்சள் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அங்கிருந்த 3 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் ெசய்தனர்.
போலீசாரின் விசாரணையில், காயல்பட்டினம் ஓடைக்கரையில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்த முயன்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
சுங்கத்துறையிடம் ஒப்படைக்க...
இதுதொடர்பாக தூத்துக்குடி சுங்கத்துறையினருக்கும் போலீசார் தகவல் தெரிவித்து, பறிமுதல் செய்த மஞ்சள், வாகனங்களை ஒப்படைக்க ஏற்பாடு ெசய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் மூட்டைகள், வாகனங்களை திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் பார்வையிட்டு போலீசாரை பாராட்டினார்.
Related Tags :
Next Story