போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு ரூ.14 லட்சம் நிதி உதவி
பணியின் போது உயிரிழந்த போலீஸ் ஏட்டுவின் குடும்பத்தினருக்கு ரூ.14 லட்சம் நிதி உதவியை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி வழங்கினார்.
திண்டுக்கல்:
போலீஸ் ஏட்டு சாவு
கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்தவர் ஜெயசீலன் (வயது 45). இவருக்கு கிளாரா என்ற மனைவியும், சாந்தசீலன், உதயசீலன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 10-ந்தேதி ஜெயசீலன் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.
இதையடுத்து அவருடன் 1997-ம் ஆண்டு பணியில் சேர்ந்த போலீஸ்காரர்கள் 2 ஆயிரத்து 623 பேர், ஜெயசீலன் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிக்க முடிவு செய்தனர்.
அதன்படி ஒவ்வொருவரும் தங்கள் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை ஜெயசீலன் குடும்பத்தினருக்காக கொடுத்தனர். மொத்தம் ரூ.14 லட்சம் வசூலானது. இந்த தொகையை ஜெயசீலன் குடும்பத்தினருக்கு வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
நெகிழ்ச்சி அளிக்கிறது
இதற்கு திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி தலைமை தாங்கி பேசுகையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்த போலீஸ் ஏட்டு ஜெயசீலனுடன் பணிபுரிந்த போலீஸ்காரர்கள் சார்பில் அவருடைய குடும்பத்தினருக்கு நிதி உதவி அளித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதுபோல் கணவர் அல்லது பிற உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் சக போலீசார் உதவிக்கரம் நீட்டுவார்கள். எனவே கிளாரா போன்ற பெண்கள் பிள்ளைகள் படிப்பு மற்றும் அவர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்பட வேண்டாம். மன உறுதியுடன் இருக்க வேண்டும் என்றார்.
அதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா பேசுகையில், ஜெயசீலன் குடும்பத்தினருக்கு சக போலீஸ்காரர்கள் உதவியது நாம் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறோம் என்பதை வெளிக்காட்டுகிறது.
இதுபோன்ற சேவை தொடர்ந்து நடைபெற வேண்டும். ஜெயசீலனின் மனைவி தனது பிள்ளைகளின் படிப்பு மற்றும் பிற உதவிகள் தேவைப்பட்டால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை அணுகலாம் என்றார்.
ரூ.14 லட்சம் நிதி உதவி
இதைத்தொடர்ந்து ஜெயசீலனின் மனைவியிடம் ரூ.14 லட்சம் நிதி உதவியை போலீஸ் டி.ஐ.ஜி. வழங்கினார்.
இதில் ரூ.7 லட்சம் நிரந்த வைப்பாகவும், ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் காசோலையாகவும், ரூ.50 ஆயிரம் பணமாகவும் ஜெயசீலன் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிதி உதவி அளித்த போலீஸ்காரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story