திருப்பூர் மாவட்ட எல்லையான மடத்துக்குளம் பகுதியில் தண்டவாளத்துக்கு அருகில் மது விற்பனை நடைபெறுவதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம்
திருப்பூர் மாவட்ட எல்லையான மடத்துக்குளம் பகுதியில் தண்டவாளத்துக்கு அருகில் மது விற்பனை நடைபெறுவதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம்
போடிப்பட்டி
திருப்பூர் மாவட்ட எல்லையான மடத்துக்குளம் பகுதியில் தண்டவாளத்துக்கு அருகில் மது விற்பனை நடைபெறுவதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாவட்ட எல்லை
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
கொரோனா தொற்று பரவலால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் திருப்பூர், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் இல்லை. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. ஆனால் அருகிலுள்ள திண்டுக்கல் மாவட்ட எல்லையான சாமிநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் அங்கு மதுப் பிரியர்கள் குவிந்து வருகின்றனர்.
இவ்வாறு சமூக இடைவெளியை மறந்து மதுப்பிரியர்கள் கூடுவதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.
மேலும் சாலை வழியாக மாவட்ட எல்லையைத் தாண்டுவதற்கு இ பதிவு அவசியம் என்பதால் மதுப்பிரியர்கள் குறுக்கு வழிகளைத் தேடி அலைகின்றனர். அவர்கள் உயிரைப்பணயம் வைத்து அமராவதி ஆற்றைக் கடந்தும், ரெயில் தண்டவாளம் வழியாக பயணம் செய்தும் மாவட்ட எல்லையைக் கடக்கின்றனர். ஆனால் எல்லோராலும் அப்படி எல்லைகளைக் கடக்க முடியவில்லை. அவர்களைக் குறி வைத்து ஒரு கும்பல் தற்போது மது விற்பனையில் இறங்கியுள்ளது.
உயிரிழப்புகள்
திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து ரெயில் தண்டவாளம் வழியாக மது வகைகளைக் கடத்தி வரும் இந்த கும்பல் மடத்துக்குளம் பகுதியில் அமராவதி ஆற்றுக்கு அருகில், தண்டவாளத்துக்கு அருகிலுள்ள புதர்களில் மறைத்து வைத்து கூடுதல் விலைக்கு மது வகைகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனைக் குடிப்பதற்காக பல மதுப்பிரியர்கள் அந்த பகுதிக்கு செல்கின்றனர்.
இதில் ஒருசில மதுப்பிரியர்கள் உற்சாக மிகுதியால் தண்டவாளத்திலேயே அமர்ந்து மது அருந்துகின்றனர். மேலும் குடிபோதையில் பலரும் தண்டவாளத்தின் மீது நடந்து வருகின்றனர். இதனால் ரெயில் மோதி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இவ்வாறு மது விற்பனை செய்யும் பகுதி உயரமானதாகவும் புதர்கள் நிறைந்ததாகவும் இருப்பதால் இவர்கள் போலீசாரிடமிருந்து எளிதாக தப்பி விடுகின்றனர். எனவே சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story