ஊட்டியில் குதிரைகளுக்கு கோதுமை தவிடு வழங்கப்பட்டது


ஊட்டியில் குதிரைகளுக்கு கோதுமை தவிடு வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 20 Jun 2021 10:13 PM IST (Updated: 20 Jun 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் குதிரைகளுக்கு கோதுமை தவிடு வழங்கப்பட்டது

ஊட்டி

கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 2-ம் கட்டமாக குதிரைகளுக்கு கோதுமை தவிடு வழங்கப்பட்டது.

வாழ்வாதாரம் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் வரவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு இல்லத்தில் படகு சவாரி செய்து விட்டு தங்களது குழந்தைகளுடன் குதிரை சவாரி செய்வது வழக்கம். இதற்காக ஊட்டி அருகே சூட்டிங்மட்டம் குதிரை சவாரி நடந்தது.

 ஆனால் தற்போது சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் வராததால் குதிரை சவாரி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து குதிரை சவாரி தொழிலாளர்கள் கூறியதாவது:-

பராமரிக்க முடியவில்லை

ஊட்டியில் குதிரை சவாரிக்காக 200-க்கும் மேற்பட்ட குதிரைகள் பயன்படுத்தப்படுகிறது. இதை நம்பி தொழிலாளர்கள் 100 பேர் இருக்கின்றனர். பெரிய குதிரையில் சவாரி செய்ய ஒரு நபருக்கு ரூ.200, வெள்ளை குதிரையில் சவாரி செய்ய ரூ.400 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 கடந்த ஆண்டும் கோடை சீசன் நடைபெறவில்லை.
நடப்பாண்டிலும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் வருமானமின்றி, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளோம். ஒரு குதிரைக்கு தினமும் கோதுமை தவிடு, புல், கொள்ளு போன்றவை வழங்க ரூ.200 முதல் ரூ.300 வரை செலவாகும். 

வருமானம் இல்லாததால் குதிரைகளை பராமரிக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகிறோம். எனவே குதிரை சவாரி தொழிலாளர்களுக்கு அரசு உதவி செய்ய முன்வரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தீவனங்கள் வினியோகம்

இதற்கிடையில், குதிரை சவாரி தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, நீலகிரியில் சுற்றுலா பயணிகளின் குதிரை சவாரிக்காக உள்ள குதிரைகளின் தீவனத்துக்காக ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், குதிரை பராமரிப்பாளர்களிடம் 2-ம் கட்டமாக கோதுமை தவிடு வழங்கும் நிகழ்ச்சி ஊட்டி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குனர் பகவத்சிங் 82 குதிரைகளை பராமரிக்கும் 35 பேரிடம் ரூ.31 ஆயிரத்து 500 செலவில் 35 மூட்டை தீவனங்களை வழங்கினார்.

Next Story