கூடலூரில் பள்ளிவாசல் சுற்றுசுவரை உடைத்த காட்டு யானை
கூடலூரில் பள்ளிவாசல் சுற்றுசுவரை காட்டு யானை உடைத்தது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கூடலூர்
கூடலூரில் பள்ளிவாசல் சுற்றுசுவரை காட்டு யானை உடைத்தது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
பள்ளிவாசல் சுற்றுசுவர் சேதம்
கூடலூர் நகராட்சி மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் இணையும் பகுதியில் தொரப்பள்ளி பஜார் உள்ளது. இங்கு முதுமலை வனத்தில் இருந்து காட்டுயானைகள் அடிக்கடி வெளியேறி அட்டகாசம் செய்து வருகின்றன.
இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.
பஜாருக்கு வரும் காட்டு யானைகள் குனியவயல், புத்தூர் வயல் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொரப்பள்ளி பஜாருக்கு ஒரு காட்டு யானை வந்தது.
பின்னர் அப்பகுதியில் இருந்த பள்ளிவாசல் சுற்றுசுவரை உடைத்து தள்ளி சேதப்படுத்தியது. பின்னர் பள்ளிவாசல் வளாகத்துக்குள் நுழைந்து அங்கு நின்றிருந்த மரத்தில் விளைந்த மாங்காய்களை பறித்து தின்றது.
பொதுமக்கள் பீதி
அதிகாலையில் அங்கிருந்து முதுமலை வனத்துக்குள் சென்றது. இதனிடையே காலை பஜாருக்கு வந்த பொதுமக்கள் பள்ளிவாசல் சுற்றுசுவரை காட்டு யானை சேதப்படுத்தியதை கண்டு பீதியடைந்தனர். மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
காட்டு யானைகள் அடிக்கடி பஜாருக்குள் வருகிறது என வனத்துறைக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் பொதுமக்கள் பீதியுடன் வாழும் நிலை உள்ளது. தற்போது பள்ளிவாசல் சுற்றுசுவரை இடித்து தள்ளி சேதப்படுத்தியுள்ளது. இதற்கு உரிய இழப்பீடு தொகையை வனத்துறையினர் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story