கொரோனா பரிசோதனை சான்று இல்லாததால் கேரளா செல்ல மேற்கு வங்க தொழிலாளர்களுக்கு அனுமதி மறுப்பு


கொரோனா பரிசோதனை சான்று இல்லாததால்  கேரளா செல்ல மேற்கு வங்க தொழிலாளர்களுக்கு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 20 Jun 2021 10:17 PM IST (Updated: 20 Jun 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா சான்று இல்லாததால் கேரளாவுக்கு செல்ல மேற்கு வங்க தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கம்பம்:
தமிழக-கேரள மாநில எல்லையான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் தமிழக விவசாய கூலி தொழிலாளர்கள் மட்டுமின்றி பீகார், குஜராத், ஒடிசா, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் அதிகளவில் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். 
இவர்களில் சிலர் கொரோனா 2-ம் அலை காரணமாக சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர். இந்தநிலையில் கொரோனா தாக்கம் குறைந்ததால் அவர்கள் மீண்டும் கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்ட வேலைக்கு திரும்பி வருகின்றனர். அதன்படி இடுக்கி மாவட்டம் சாந்தம்பாறை, உடும்பன்சோலை பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வதற்காக மேற்கு வங்க மாநிலத்தை  சேர்ந்த 49 தொழிலாளர்கள் தங்கள் 7 குழந்தைகளுடன் தனியார் பஸ் மூலம் இ-பதிவு பெற்று வந்தனர். 
கொரோனா பரிசோதனை சான்று
நேற்று மாலை அவர்கள் கம்பம் நகரை கடந்து கேரள மாநிலம் கம்பம்மெட்டிற்கு சென்றனர். அங்கு கேரள மாநில சோதனைசாவடியில் இருந்த போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் பஸ்சில் வந்த மேற்கு வங்க மாநில தொழிலாளர்களிடம் கொரோனா பரிசோதனை சான்று கேட்டனர். 
அப்போது அவர்கள் சான்று இல்லை என கூறினர். இதையடுத்து கொரோனா பரிசோதனை சான்று இருந்தால் மட்டுமே கேரளாவுக்குள் செல்ல அனுமதிக்கப்படும் என்று கூறி பஸ்சை தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
தவிப்பு
இதையடுத்து அவர்கள் தமிழகத்தில் உள்ள கம்பம்மெட்டு மலை அடிவாரத்திற்கு வந்து காத்திருந்தனர். அங்கு அவர்கள் என்ன செய்வது? என்று தெரியாமல் குழந்தைகளுடன் தவிப்புக்குள்ளானார்கள். இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் அங்கு விரைந்து சென்று தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 
பின்னர்  இன்ஸ்பெக்டர் சிலைமணி, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவை தொடர்பு கொண்டு தொழிலாளர்களின் நிலை குறித்து தகவல் கொடுத்தார். இதையடுத்து அவர், இடுக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருப்பசாமியை செல்போனில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். 
இதனிடையே மேற்கு வங்க தொழிலாளர்கள், கேரளாவுக்கு செல்ல அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் கம்பம்மெட்டு சோதனைசாவடிக்கு சென்று அங்கு அமர்ந்து இருந்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, கேரள மாநில அரசு அனுமதி கிடைத்தவுடன் அவர்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றார். 

Next Story