போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வீட்டில் கார், மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு-கள்ளக்காதலி கைது


போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வீட்டில் கார், மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு-கள்ளக்காதலி கைது
x
தினத்தந்தி 20 Jun 2021 10:24 PM IST (Updated: 20 Jun 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த கார் மற்றும் மோட்டார்சைக்கிளுக்கு தீ வைத்த அவருடைய கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மத்தலாங்குளம் தெருவை சேர்ந்தவர் சுந்தர் (வயது 57). திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனியாக வசித்து வரும் சுந்தருக்கும், வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த சுமதி (39) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. 

இவர்கள் சில வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. சுமதி அடிக்கடி பணம் கேட்டு ெதாந்தரவு செய்ததால் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் சுந்தர் வேலையை முடித்து விட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து உள்ளார். சுந்தரின் வீடு 2 மாடி வீடாகும். இதில் தரை தளத்தில் உள்ள வீட்டில் அவர் வசித்து வருகின்றார். வீட்டின் போர்டிகோவில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்கச்சென்றார். ஏற்கனவே அங்கு அவரது கார் ஒன்றும் நிறுத்தப்பட்டு இருந்தது.

இரவு சுமார் 12.30 மணியளவில் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தருக்கு போன் செய்து வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த காரும், மோட்டார் சைக்கிளும் தீப்பிடித்து எரிவதாக  தெரிவித்தனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைத்துறையினர் அங்கு கொளுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர். கொளுந்து விட்டு எரிந்த தீயினால் வீட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகளும் சேதம் அடைந்தது. 2-வது மாடிவரை கரும்புகை படர்ந்தது. வீட்டில் பெரிய அளவில் சேதங்கள் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
 
இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வீட்டுகளில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். 

அப்போது சப்- இன்ஸ்பெக்டர் சுந்தர் வீட்டின் பக்கத்து வீட்டின் கேட்டை திறந்து, பெண் ஒருவர் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது பதிவாகி இருந்தது. இதையடுத்து சுந்தர் கொடுத்த தகவலின் பேரில் சந்தேகத்தின் அடிப்படையில் சுந்தரின் கள்ளக்காதலி சுமதியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து உள்ளார். மேலும் தீவிர விசாரணையில் காழ்ப்புணர்ச்சி காரணமாக காரையும், மோட்டார் சைக்கிளையும் கொளுத்தியதாக தெரிவித்தார். இதையடுத்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமதியை கைது செய்தனர்.

 திருவண்ணாமலையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கார், மோட்டார் சைக்கிளை கள்ளக்காதலி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story