தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை ஒப்படைக்காமல் அலைக்கழித்த அதிகாரிகள் கண்டனம் தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்


தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை ஒப்படைக்காமல் அலைக்கழித்த அதிகாரிகள்  கண்டனம் தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 Jun 2021 10:43 PM IST (Updated: 20 Jun 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை ஒப்படைக்காமல் அலைக்கழித்த அதிகாரிகளை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உளுந்தூர்பேட்டை

தூக்குப்போட்டு தற்கொலை 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகப்பன் மனைவி சிவசக்தி(வயது 22). குடிபழக்கம் உள்ள அழகப்பனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே நடந்த தகராறில் மனமுடைந்த சிவசக்தி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சிவசக்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்தனர். 

கோட்டாட்சியர் விசாரணை

திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமையால் சிவசக்தி தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சாய்வர்த்தினி விசாரணை நடத்தி வருகிறார். 
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட சிவசக்தியின் உடலை பெறுவதற்காக அவரது உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் உடலை ஒப்படைக்காமல் அதிகாரிகள் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதற்கிடையே தூக்குப்போட்டு தற்கொலை செய்து 2 நாட்கள் ஆன பிறகும் இளம்பெண்ணின் உடலை ஒப்படைக்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக கண்டனம் தெரிவித்து சிவசக்தியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி கிராமத்தில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 
சுங்கச்சாவடிக்கு மிக அருகில் நடைபெற்ற இந்த மறியலால் சாலையின் இரு புறங்களிலும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. 

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமொழியன் மற்றும் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 
முதலில் பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ளாத கிராம மக்கள் சாலையில் படுத்து உருண்டு தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை உடனடியாக ஒப்படைக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து திரும்பிச் சென்றனர். 
தற்கொலைசெய்து கொண்ட பெண்ணின் உடலை ஒப்படைக்காமல் அதிகாரிகள் அலைக்கழித்ததை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் உளுந்தூர்பேட்டைபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story