திருப்பூரில் பனியன் வேஸ்ட் குடோன் உரிமையாளர் வீட்டில் ரூ.8 லட்சம் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரில் பனியன் வேஸ்ட் குடோன் உரிமையாளர் வீட்டில் ரூ.8 லட்சம் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்
திருப்பூரில் பனியன் வேஸ்ட் குடோன் உரிமையாளர் வீட்டில் ரூ.8 லட்சம் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருடிய பணத்தை மண்ணுக்குள் புதைத்து வைத்து மாயமானதால் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரூ.8 லட்சம் திருட்டு
திருப்பூர் கோல்டன் நகரைச்சேர்ந்தவர் மாயாண்டி (வயது50). இவர் அப்பகுதியில் பனியன் வேஸ்ட் குடோன் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 14-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள மற்றொரு வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
மறுநாள் காலை வந்து பார்த்த போது வீட்டின் பீரோவில் வைத்திருந்த ரூ.8 லட்சத்தை காணவில்லை. பீரோவை சாவியால் திறந்து பணம் திருடு போனது தெரியவந்தது.
தனிப்படை
இதைத்தொடர்ந்து மாயாண்டி அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். மேலும் பதிவான கைரேகையை வைத்து துப்பு துலக்கினார்கள்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் கோல்டன் நகர் ஜோதி நகரை சேர்ந்த அருண்குமார் (21), பவானி நகரை சேர்ந்த அபிஷேக் (21), ஏ.எஸ்.பண்டிட் நகரை சேர்ந்த சூர்யா (21) ஆகிய 3 பேரை போலீசார் பிடித்தனர்.
பணத்தை காணவில்லை
விசாரணையில் அருண்குமாரும், அபிஷேக்கும் சேர்ந்து சம்பவத்தன்று மாயாண்டியின் வீட்டில் புகுந்து திருட சென்றுள்ளனர். அப்போது பீரோ சாவி இருந்ததைப்பார்த்து, பீரோவை திறந்து ரூ.8 லட்சத்தை திருடி உள்ளனர்.
பின்னர் திருடிய பணத்தை அப்பகுதியில் உள்ள முள் காட்டில் வைத்துள்ளனர். பின்னர், அதிலிருந்து ரூ.20 ஆயிரத்தை எடுத்து அருண்குமார், அபிஷேக் மற்றும் சூர்யாவுடன் பங்கு பிரித்துள்ளனர். மீதமுள்ள தொகையை பையில் போட்டு கட்டி மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளனர். 2 நாட்கள் கழித்து வந்து பார்த்தபோது பை மட்டுமே இருந்துள்ளது. பணத்தை காணவில்லை. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் நண்பர்கள் எடுத்துச்சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
3 பேர் கைது
போலீசில் சிக்கிய அருண்குமார், அபிஷேக், சூர்யா ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் கூறும்போது, "முள் காட்டு பகுதியில் 3 பேரும் சேர்ந்து மது அருந்திய போது பணத்தை புதைத்து வைத்ததை நண்பர்களிடம் உளறியுள்ளனர். அப்போது மேலும் 2 நண்பர்கள் உடன் இருந்துள்ளனர். இதனால் 2 பேரும் இவர்களுக்கு தெரியாமல் பணத்தை எடுத்துச் சென்றிருக்கலாம்" என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது என்றனர்.
Related Tags :
Next Story