சாலை வசதி இல்லாததால் 7 கிலோ மீட்டர் நடந்து சென்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவினர்
சாலை வசதி இல்லாததால் 7 கிலோ மீட்டர் நடந்து சென்று பொதுமக்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை:
மலை கிராமம்
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள பெட்டமுகிலாளம் ஊராட்சிக்குட்பட்டது கடமகுட்டை கிராமம். கிருஷ்ணகிரி-தர்மபுரி மாவட்ட எல்லையில் மலைத்தொடரில் இந்த கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.
நூறு ஏக்கர் பரப்பளவில் ராகி, நிலக்கடலை மற்றும் கிழங்கு வகைகளை அங்குள்ள மக்கள் பயிரிட்டு வருகின்றனர். சுத்தமான காற்று, சுகாதாரமான சுற்றுப்புறம் கொண்ட இந்த கிராமம் 7 கிலோ மீட்டர் உயரத்தில் மலை மீது அமைந்துள்ளது. இதனால் கடமகுட்டை கிராமத்திற்கு செல்ல சாலை வசதி கிடையாது.
7 கிலோ மீட்டர் நடை பயணம்
இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் அத்தியாவசிய தேவைகள், மருத்துவ உதவிக்கு கரடு, முரடான மலைப்பாதை வழியாக தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளிக்கு வந்து செல்கிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இந்த மக்களுக்கு சிறப்பு ஏற்பாட்டில் தர்மபுரி மாவட்ட ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே மாதம் ஒருமுறை இந்த கிராமத்திற்கு மருத்துவ குழுவினர் வந்து, பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். அதாவது, தேன்கனிக்கோட்டை அருகே உள்ள உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளிக்கு சென்று, அங்கிருந்து 7 கிலோ மீட்டர் மலையில் நடை பயணமாக சென்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அங்குள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.
கொரோனா இல்லை
சிலர் மருத்துவ குழுவினரின் சிகிச்சைக்கு பயந்து வனப்பகுதிக்குள் ஓடி தலைமறைவாகும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது. அவர்களையும் மருத்துவ குழுவினர் கண்காணித்து ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து மருந்து, மாத்திரைகள் வழங்குகின்றனர். இந்த பணியில் கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையில், ஊழியர்கள் ஞானவேல், கோபி, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களுக்கு உரிய சிகிச்சை அளித்து வரும் மருத்துவ குழுவினர் கரடு, முரடான மலைப்பாதையில் நடந்து செல்வதை காண சிரமமாக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுவரை இந்த கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது கூடுதல் தகவலாகும்.
Related Tags :
Next Story